பெங்களூரு சிறையில் மொபைல் போன் வீடியோ வெளியானதால் அரசுக்கு நெருக்கடி

1

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய உமேஷ் ரெட்டி, தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் உள்ளிட்ட பல கைதிகள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானதால், மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், விசாரணை கைதிகள் என 4,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள பிரபல ரவுடி குப்பாச்சி சீனா, சிறைக்குள் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ, கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

சிறைக்குள் ஏராளமான கைதிகள், செல்போன் பயன்படுத்தும் வீடியோ நேற்று வெளியானது. இது மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக, 2022ல் கைது செய்யப்பட்ட ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமேஷ் ரெட்டி, துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் காதலன் தருண் கொண்டாரு ராஜு ஆகியோரின் கைகளில் செல்போன் இருக்கும் காட்சிகள் வெளியாகின.

ஜுகாத் சகீல் மன்னா சிரித்தபடியும், உமேஷ் ரெட்டி டிவி பார்த்தபடியும், தருண் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலும் அமர்ந்து ஹாயாக செல்போன் பார்ப்பது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ வேகமாக பரவியதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீடியோவில் இருக்கும் கைதிகள் அறையில் அதிரடி சோதனை நடத்தவும், அதுதொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சிறை அதிகாரிகளுக்கு, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தா உத்தரவிட்டுள்ளார்.

சிறை ஊழியர்கள் உதவியுடன், கைதிகள் மொபைல் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில், இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தியது பற்றி, என்னிடம் நிறைய தகவல் இல்லை. விசாரணைக்கு பின், அனைத்தையும் தெரிவிக்கிறேன்,'' என்றார்.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Advertisement