மேம்பட்ட உற்பத்தி மையத்தை இயக்க தனியாருக்கு அழைப்பு

சென்னை: சென்னையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில், உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான தேவையை கருதி, மூன்று திறன்மிகு மையங்களை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னை தரமணி டைடல் பார்க் வளாகத்தில் அமைத்து உள்ளது.


'டிட்கோ' அழைப்பு



அதன்படி, 'டேன்சேம்' எனப்படும் தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை, சீமென்ஸ் இண்டஸ்டரியல் சாப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்து, 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம், 2022 நவ., 8ல் துவக்கப்பட்டது.

அங்குள்ள அதிநவீன கருவிகளை பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் ஆகியவை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான சேவைகளை பெறலாம்.

அதன்படி, உற்பத்தியில் புதுமை, 'புராடக்ட் இன்னோவேஷன், பிரிடிக்டிவ் இன்ஜினியரிங் அனலிடிக்ஸ், ஸ்மார்ட் பேக்டரி ரிசர்ச்' உள்ளிட்ட பிரிவுகளில் நிபுணத்துவத்தை, திறன்மிகு மையம் கொண்டுள்ளது.

தற்போது, சீமென்ஸ் நிறுவனத்துடனான மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. எனவே, மேம்பட்ட உற்பத்திக்கான மையத்தை இயக்க, தனியார் நிறுவனங்களுக்கு, 'டிட்கோ' அழைப்பு விடுத்துள்ளது.



20 - 25 சதவீதம்



இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவைகளை பெறும் வசதி மேம்பட்ட உற்பத்தி மையத்தில் உள்ளது.

''இந்த மையம் தற்போது புதிய நிறுவனம் வாயிலாக இயக்கப்பட உள்ளது. அந்நிறுவனம், ஆண்டுதோறும் கிடைக்கும் மொத்த வருவாயில், 20 - 25 சதவீதம் வரை, 'டிட்கோ'வுக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.

ரூ.250 கோடியில், தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் எம்.எஸ்.எம்.இ., பெருநிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் சேவைகளை பெறலாம்.

Advertisement