அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கத்தால் கடும் பாதிப்பு: சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்கிறார் டிரம்ப்

9


வாஷிங்டன்: அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கம் தொடர்பாக, ஜனநாயகக் கட்சியினருடன் விரைவில் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முந்தைய அதிபர் ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பார்லிமென்டின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.



இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு நிர்வாகம் முடக்கம், 6வது வாரத்தில் நுழைந்து, அமெரிக்கா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஊதியமின்றி தவிக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் பின்வாங்க மறுத்துவிட்டார்.



இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் வரி சலுகைகளை நீட்டிக்கக் கோரும் ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை. குடியரசுக் கட்சியினர் பணி நிறுத்தத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும்பாலான சட்டங்களுக்கு 60 சென்ட் ஓட்டுக்கள் தேவைப்படும் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement