தி.மு.க.,வின் அறிவும், உழைப்பும் வாரிசு அரசியலை ஊக்குவித்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
மதுரை: ''தி.மு.க.,வின் அறிவும், உழைப்பும் மக்களை வாழவைப்பதற்கு அல்லாமல் வாரிசு அரசியலை ஊக்குவித்தது,'' என, மதுரையில் சட்டசபை எதிர்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., போல கட்சி நடத்த, வெற்றி பெற அறிவு வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அக்கறை வேண்டுமா, அறிவு வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்கட்சி அமைச்சர்கள் கூறுவது போல் தி.மு.க., பயப்படும் கட்சி அல்ல; பயமுறுத்தும் கட்சி. முன்னாள் பிரதமர் இந்திரா மீது மதுரையில் கல்லால் எறிந்து ஆபாசமாக பேசி பயமுறுத்திய கட்சி. மறைந்த பிரதமர் இந்திரா பயப்படாமல் சர்க்காரியா கமிஷன் மூலம் நெருக்கடி கொடுத்த போது காலில் விழுந்து கதறிய தி.மு.க.,வுக்கு அப்போது எந்தளவுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது என்றும் மக்களுக்கு தெரியும்.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை தடுத்து, சட்டசபையில் செருப்பு வீசி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பயமுறுத்தியது. அதன் விளைவு தி.மு.க., 13 ஆண்டுகள் முடங்கி வனவாசம் போக நேர்ந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி சேலையை இழுத்து பயமுறுத்தியது. அவர் பயந்து ஓடிவிடுவார் என நினைத்தது. ஆனால் அவர் திருப்பி அடித்த போது 'அய்யோ... கொல்றாங்களே... கொல்றாங்களே..' என அலறியதை நாடு நன்கு அறியும்.
அந்த வழியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியையும் பயமுறுத்த பார்க்கின்றனர். அவர் மிரட்டலுக்கு அஞ்சாமல் ஜெயலலிதா வழியை பின்பற்றுகிறார்.
தமிழகத்தில் 75 ஆண்டுகளில் 25 ஆண்டுகள் மக்களுக்கு தி.மு.க., பணியாற்றியது. அக்கட்சி அறிவும், உழைப்பும் தேவையில்லை என மக்கள் 50 ஆண்டுகள் நிராகரித்துள்ளனர். தற்போது மகனுக்கு மகுடம் சூட்ட நினைக்கும் மன்னராட்சிக்கும் முடிவுகட்ட 2026 தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்க காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'