உப்பு தண்ணீர் வினியோகம் நெமிலிச்சேரி மக்கள் அவதி
நெமிலிச்சேரி: நெமிலிச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாகாத்தம்மன் நகரில், உப்பு தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில், 12,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நாகாத்தம்மன் நகர் சுற்றுவட்டாரத்தில், உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. இதனால், பொதுமக்கள் நன்னீர் கிடைக்க வழி இல்லாமல் அவதி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 2022 முதல் ஜல்ஜீவன் திட்டம் வாயிலாக, 2, 3, 4வது வார்டு நாகாத்தம்மன் நகரில், நன்னீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, 400க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் துவங்கிய ஆறு மாதங்கள் வரை நன்னீர் வழங்கப்பட்டது.
அதன் பின், கடந்த மூன்று ஆண்டுகளாக உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு வீடுகளுக்கும், 1,240 முதல் 3,000 ரூபாய் வரை வசூலித்து குழாய் அமைத்ததால் எந்த பயனும் இல்லை.
பொதுமக்கள் டிராக்டரில் வரும் தண்ணீரை, ஒரு குடம் 15 ரூபாய்க்கும், கேன் தண்ணீரை 30 ரூபாய்க்கும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து, நெமிலிச்சேரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 1ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிட்டு, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.