வருவாய்த்துறையினரிடம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை ஒப்படைக்க ஆலோசனை

தேனி: வேளாண் துறை தற்போது மேற்கொண்டு வரும் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க ஆலோசனை நடப்பதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்தாண்டு முதல் டிஜிட்டல் கிராப் சர்வே ஆடி, கார்த்திகை, கோடை பட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சர்வே மூலம் ஒரு இடத்தில் சாகுபடியாகும் அனைத்து பயிர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். மேலும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நிவாரணம் உள்ளிட்டவை வழங்க எளிதாக இருக்கும் என வேளாண் துறையால் தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளை வி.ஏ.ஓ.,க் கள் மூலம் 2024 ஜூலை, ஆக.,ல் மேற்கொள்ள திட்டமிட்டனர்.

ஆனால், வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதனால் வேளாண், தோட்டக்கலை கல்லுாரி மாணவர்கள் மூலம் சர்வே பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

2024 கார்த்திகை, 2025 கோடை பட்ட பயிர் சாகுபடி சர்வே பணி கல்லுாரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள் படிப்பு பாதிக்கப் படுவதாக இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனியார் மூலம் கடந்த ஆடிபட்டம் குறித்த டிஜிட்டல் கிராப் சர்வே ஆக., செப்.,ல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே பணியில் 75 சதவீதத்திற்கும் மேல் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட துறையினர் மறு சர்வே பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் கோடை கால சாகுபடி சர்வே பணிகளை வருவாய்த்துறை மூலம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement