செங்கோட்டையன் நீக்கத்தை தொடர்ந்து அதிரடி; கோபியில் அதிமுகவின் புதிய அலுவலகம் திறப்பு

ஈரோடு; ஈரோடு புறநகர் அதிமுக மேற்கு மாவட்டத்துக்கான புதிய அலுவலகம் கோபிச்செட்டி பாளையத்தில் இன்று திறக்கப்பட்டது. இதை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

அதிமுகவில் பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கருத்தை பொது வெளியில் வெளிப்படுத்தியதாக கூறி செங்கோட்டையனை கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினார். அவரின் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். செங்கோட்டையன் வசம் இருந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே. செல்வராஜுக்கு அளிக்கப்பட்டது.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த போது கட்சி அலுவலகம் கோபிச்செட்டிப் பாளையத்தில் அவரது சொந்த இடத்தில் இருந்து வந்தது. கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதை அடுத்து, நல்ல கவுண்டம் பாளையம் பாலாஜி நகரில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்துக்கான புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான வேலுமணி இன்று கட்சி நிர்வாகிகளுடன் திறந்து வைத்தார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய வேலுமணி, 'வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வென்று மீண்டும் இபிஎஸ் முதல்வர் ஆவார்' என்றார்.

Advertisement