வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் திமுக நிர்வாகியா: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்

7


சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியில் திமுக ஐடி விங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஈடுபடும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, 2004ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் போன்றோரை நீக்குவது, இதன் பிரதான நோக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இப்பணியை ஒத்திவைக்க வலியுறுத்தி, தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.எனினும், திட்டமிட்டபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி கடந்த 4ம் தேதி துவங்கியது. முதல் கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.


கடந்த 2002 - 2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் வீடுகளுக்கு சென்று, கணக்கெடுப்பு படிவத்தை வினியோகம் செய்தனர். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அடுத்தமுறை வரும்போது உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூறி சென்றனர்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு, தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி தலைமை உத்தரவுபடி, பூத் ஏஜன்டுகள், தேர்தல் அலுவலர்களுடன் சென்றனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு பூத் ஏஜன்டு, இரண்டு துணை ஏஜன்டுகள், 100 வாக்காளர்களுக்கு ஒரு ஏஜன்ட் என, தேர்தல் பணிக்கு, கட்சி தொண்டர்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.


இந்நிலையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில், முடிகண்டம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.


சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவில், பெண் ஒருவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி ஆவணங்களை விநியோகித்து கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த பாஜவினர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் ஓட்டுச்சாவடி அலுவலர் இல்லை என்பதும், திமுக ஐடி விங் என்பதும் தெரியவந்தது. நீங்கள் எப்படி கொடுக்கலாம் என பாஜவினர் கேட்டதும், அதிகாரி கொடுக்க கூறியதாக அந்தப் பெண் தெரிவித்தார். வீடியோ எடுப்பதை பார்த்த பெண், தான் திமுக இல்லை எனக்கூறும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


இதனையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் திமுகவினர் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜவினர், இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


திமுக ஐடி விங் பெண் ஊழியருடன் தங்கள் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள பாஜ மாநில செயலாளர் வினோஜ் செல்வம், இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement