வேட்டி, லுங்கிக்கு புவிசார் குறியீடு தமிழகம் பரிந்துரை

சென்னை : நாகர்கோவில் வேட்டி, குடியாத்தம் லுங்கி உட்பட, தமிழகத்தின் ஐந்து தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்க, மத்திய அரசுக்கு மாநில கைத்தறித் துறை பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் சார்பில், தனித்துவமான தயாரிப்புக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. உணவு, வேளாண் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகள் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், 69 பொருட்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், காஞ்சி பட்டு புடவை, உள்ளிட்ட 10 கைத்தறி தயாரிப்புகளுக்கு, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில், நாகர்கோவில் வேட்டி, குடியாத்தம் லுங்கி, உறையூர் பருத்தி சேலை, சின்னாளப்பட்டி பட்டு சேலை, திருவாரூர் கூறைநாடு சேலை ஆகிய ஐந்து ரகங்களுக்கு, புவிசார் குறியீடு வழங்க கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement