குழாய் இணைப்பு வழங்கியும் குடிநீர் சப்ளை இல்லை டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதி இன்றி சிரமம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கியும் குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாட்டு நிலவுகிறது.
டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம், சத்யா நகர், சீதாராம்தாஸ் நகர் பகுதிகள் உள்ளன. பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். குடிநீர், சுகாதார பராமரிப்பு, ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்புகள் வழங்கியும் குடிநீர் கிடைக்கவில்லை. பல தெருக்களில் வடிகால் இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சாக்கடை சுத்தம் செய்யாததால் சுகாதார கேடு நிலவுகிறது. இப்பகுதிகளில் அன்றாடம் சேரும் குப்பை பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இப் பிரச்சனை குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சமுதாய கூடம் பூட்டி வைப்பு ↓ ரமேஷ், முத்துக்கிருஷ்ணாபுரம்: முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் ஐந்து தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருக்களில் சிமென்ட் ரோடு வசதி இல்லாததால் மழைக்காலத்தில் கழிவு தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. பல இடங்களில் தெருக்கள் மேடு பள்ளமாகி சேரும், சகதியுமாக மாறிவிடுவதால் நடக்க முடியாத நிலையில் உள்ளது. தெருவிளக்கு வசதி இல்லை. 2014 -2015ல் ரூ.16 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கடந்த ஆறு மாதமாக பயன்படுத்த முடியாத வகையில் ஒன்றிய அலுவலகத்தில் கட்டுமான பணி நடைபெறுவதால் அங்குள்ள தளவாட பொருட்களை சமுதாயக் கூடத்தில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.
இதனால் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. தளவாடப் பொருட்களை அப்புறப்படுத்த தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கிராமத்தில் வேறு இடமும் இல்லை.
சுடுகாடு நிலமும் ஆக்கிரமிப்பு காமராஜ், முத்துக்கிருஷ்ணாபுரம்: கிராமத்தில் ஆண்கள், பெண்களுக்கு பொதுக்கழிப்பறை வசதி இல்லை. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. அமரும் இடம் கட்டித்தர பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எரியூட்டு கொட்டகை இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். சுடுகாட்டுக்கு ஒதுக்கிய இடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அதனை ஒட்டி நிலம் வைத்திருப்பவர்கள் சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றி சுற்றுச்சுவர், சுடுகாட்டிற்கு விளக்கு வசதி ஏற்படுத்திட வேண்டும்.
குப்பையை எரிப்பதால் பாதிப்பு எம்.கண்ணாயிரம், சத்யா நகர்: சத்யா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். முதலக்கம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் தினமும் தீ வைத்து குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. 10க்கும் மேற்பட்ட தெருக்களில் வடிகால், சிமென்ட் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பையால் அடைப்பு ஏற்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிப்பு முடிந்து பல மாதமாகிறது. இன்னும் குடிநீர் விநியோகம் இல்லை. ஏற்கனவே உள்ள திட்டத்தில் வாரம் ஒரு முறை கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. கிராம சபை கூட்டங்களில் தரும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'