தி.மு.க.,வை வீழ்த்த எதிரிகள் எடுத்த ஆயுதம் வாக்காளர் பட்டியல் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

2

திருச்சி: ''புதுப்புது முயற்சிகள் எடுத்து, எதிரிகள் வீழ்த்தப்பார்க்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி இல்லத் திருமண விழாவில், முதல்வர் பேசியதாவது:

கடந்த 75 ஆண்டுகளில், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க., இயங்கி கொண்டே இருக்கிறது. அதனால் தான் அது இயக்கம். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டசபை தொகுதி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்துகிறேன்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ வெளியிட்டிருக்கிறேன். எதிரிகள் புதுப்புது முயற்சிகள் எடுத்து நம்மை வீழ்த்த பார்க்கின்றனர்.

அவர்கள், இப்போது எடுத்திருக்கும் ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம். தி.மு.க.,வை ஒழிக்கும் எண்ணம் எடுபடாது. தி.மு.க.,வை பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்று ஆட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

டில்லி பிக்பாஸிற்கு

ஆமாம் சாமி போடுகிறார்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். தி.மு.க., போட்ட வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அ.தி.மு.க., தங்களையும் வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்துள்ளது. சிறப்பு திருத்தத்தை ஆதரிக்கும் பழனிசாமி, தி.மு.க., மனுவுடன் ஏன் இணைந்துள்ளார்? அக்கறை இருந்தால், அ.தி.மு.க., முன்கூட்டியே வழக்கு போட்டிருக்க வேண்டும். இது அ.தி.மு.க.,வின் கபட நாடகம். டில்லியில் உள்ள பிக்பாஸிற்கு, பழனிசாமி 'ஆமாம் சாமி' போட்டே ஆக வேண்டும்.

பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை. அதனால், விமர்சிக்கிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படாமல், எங்கள் வேலையை பார்க்கிறோம். எத்தனை முனை போட்டி வந்தாலும், தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்.

- ஸ்டாலின், தமிழக முதல்வர்

Advertisement