அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!

43


சென்னை: அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த, 2023, ஏப்.,14ல், தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். ''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' அண்ணாமலை கூறினார்.

இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிஆர்பாலு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், 'வழக்கில் நானே டிஆர்பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை செய்யப்போவதாக' அண்ணாமலை அறிவித்தார். அந்த குறுக்கு விசாரணை இன்று நவ.,11ல் நடப்பதாக இருந்தது. டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்த இருக்கும் குறுக்கு விசாரணையை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினர் காத்திருந்தனர்.

இன்று (நவ., 11) அண்ணாமலை குறுக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு தயாராக வந்திருந்தார். ஆனால் டி.ஆர்.பாலு கோர்ட்டுக்கு வரவில்லை. நீதிபதிகளிடம், 'டிஆர்பாலு எம்.பி.,யாக இருப்பதால் அதற்கான பணியில்அவர் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என்று அவரது வக்கீல்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


பின்னர் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்பாலு பங்கேற்றார்.

Advertisement