மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய பேச்சு: வைத்திலிங்கத்துக்கு பழனிசாமி பச்சைக்கொடி

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பக்கவாதம் பாதிப்பு காரணமாக, அ.தி.மு.க.,வில் இணைவதற்கு தாமதமாகியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோருடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதில், மனோஜ் பாண்டியன், கடந்த வாரம் தி.மு.க.,வில் இணைந்தார்.

அதற்கு முன்னதாக, முன்னாள் எம்.பி.,க்கள் அன்வர் ராஜா, டாக்டர் மைத்ரேயன், மருது அழகுராஜ் போன்றவர்கள், தி.மு.க.,வில் இணைந்து விட்டனர். அதேபோல், பன்னீர் அணியில் இருந்து வைத்திலிங்கமும் வெளியேற முடிவு செய்துள்ளார். ஆனால், மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர விரும்புகிறார்.

பன்னீர்செல்வம் அணியிலிருந்து வெளியேறும் அ.தி.மு.க., பிரமுகர்கள், தி.மு.க.,வில் இணைவதை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரும்பவில்லை. அதனால், மன்னிப்பு கடிதம் பெற்று, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பொறுப்பை, முன்னாள் அரசு அதிகாரிகள் சிலரிடம் ஒப்படைத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தி.மு.க.,வில் சேர்க்க பேச்சு நடத்தப்பட்டது.

அதை முறியடித்து, அ.தி.மு.க.,வில் அவருக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்குவதாக, பழனிசாமி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடும் ஏற்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் திடீரென வைத்திலிங்கத்திற்கு மூளையில் ஏற்பட்ட சிறு அடைப்பு காரணமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நலம் பெற்று திரும்பியதும், அ.தி.மு.க.,வில் இணைவார் என, வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கூறினர்.


அதேபோல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகி ஒருவர், அவரிடம் பேச்சு நடத்தியுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement