எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்

5

சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வும் முதல்வருமான ஸ்டாலின், கட்சியின் பாக முகவர்களுடன் கலந்து ரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சமீப நாட்களாக எங்கு சென்றாலும், எஸ்.ஐ.ஆர்., என்னும் வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தான் பேசுகின்றனர்.

இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், நாங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் வாயிலாக, மத்திய அரசு, இப்படியொரு சுமையை எல்லார் மீதும் திணித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நடக்கிறது. உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி விடுவரோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது.

அப்படி ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காகவே, நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்; போராட்டம் நடத்தி உள்ளோம். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மத்திய அரசு, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை கொடுக்கும் நெருக்கடிகளை கடந்துதான், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு, தி.மு.க.,வினரும் கூட்டணி கட்சியினரும் அயராது உழைக்க வேண்டும்.

வாக்காளர் திருத்தப் பட்டியல் பணி நிறைவுற 20 நாட்களே உள்ளன. காலம் குறைவாக இருப்பதால், தலை சுற்றும் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை, ஒவ்வொரு வாக்காளரும் முழுமையாக நிரப்பி அளிக்க, தி.மு.க.,வினர் உதவிட வேண்டும்.

வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எதிராக மேற்கு வங்க மக்கள் பெரிய அளவில் கொந்தளித்து போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் உதிரி கட்சியினர், வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை ஆதரித்து வழக்கு போட்டுள் ளனர்.

இவ்வாறு பேசினார்.

Advertisement