மானாமதுரையில் துப்புரவு பணி படுமோசம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் துப்புரவு பணி மிகவும் மோசமான நிலையில் நடைபெற்று வருவதாகவும் நகராட்சி கூட்டம் நடைபெறும் போது மட்டுமே கொசு மருந்து அடிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.கமிஷனர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் பட்டுராஜன் வரவேற்றனர்.

கூட்டம் துவங்கியவுடன் தி.மு.க., கவுன்சிலர்கள் சோம சதீஷ்குமார், காளீஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துாய்மை பணிகள் மோசமான நிலையில் நடைபெறுவதால் கழிவுநீர் தேங்கி, குப்பை குவிந்து கிடப்பதாகவும், ந கராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குறை சொல்லக்கூடாது என்பதற்காக கூட்டம் நடைபெறும் நாட்களின் போது மட்டுமே கொசு மருந்து அடிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

கமிஷனர் கோபாலகிருஷ்ணன்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பையை அகற்ற சேதமடைந்த டிராக்டர்களுக்கு பதிலாக புதிதாக டிராக்டர்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.துப்புரவு ஆய்வாளர் மற்றும் மேஸ்திரிகள் தினம்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:

மாரிக்கண்ணன், தி.மு.க., கவுன்சிலர்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது போடப்பட்ட தார் ரோடுகளில் பெரும்பாலான ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீட்டு வரி ரசீது போடுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

இந்திரா அ.தி.மு.க., கவுன்சிலர்: பழைய தபால் ஆபீஸ் தெருவில் நள்ளிரவில் குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சி தலைவர் மாரி யப்பன் கென்னடி தி.மு.க.,: குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இனிமேல் முறையாக உரிய நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தெய்வேந்திரன் அ.தி.மு.க., கவுன்சிலர்: மானாமதுரை வைகை ஆற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு செயல்பட்ட முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் இடத்தை மீண்டும் சீரமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலாளர் பாலகிருஷ்ணன் துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன், கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement