காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்

6


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனில் திடீரென வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.


இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவது இடம் பெற்றுள்ளது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போது விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சில ரசாயனங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.



விபத்து நிகழ்ந்த பகுதி சீல் வைக்கப்பட்டதால், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் படையினர் வளாகத்தைச் சுற்றி வளைத்தனர். ஸ்ரீநகர் துணை கமிஷ்னர் அக்ஷய் லப்ரூ உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களைச் சந்தித்தார்.


ஏற்கனவே, இந்த வாரத் தொடக்கத்தில் டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில், வெடி விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement