விழுந்து நொறுங்கிய குட்டி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

1


திருப்போரூர்: சென்னை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.


சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, 'பிளேட்டஸ் பி.சி.,7' என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தை விமானி சுபம், 30, என்பவர் இயக்கினார். விமானம் சென்னை வான்வெளியில் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் பகுதியில், நேற்று பகல் 2:00 மணிக்கு பறந்தது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். உடனடியாக, விமானத்தை பாதுகாப்பாக, அப்பகுதியில் தரையிறக்க முயன்றார். ஆனால், எதிர்பார்த்தபடி விமானத்தை தரையிறக்க முடியவில்லை.



கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள, தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்தது. இதில், விமானத்தின் சில பாகங்கள் சிதறின. முன்னதாக, விமானம் கீழே விழப்போவதை அறிந்த விமானி, பாராசூட்டில் குதித்து தப்பினார். பயிற்சி விமானம் விழுந்த இடத்தில், தொழிற்சாலையின் ஒரு பகுதி சேதமானது.


சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தோர் விரைந்து வந்தனர். விமானம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து, திருப்போரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விமானி பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தற்போது விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரமாக நடந்து நடந்தது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு விபத்திற்கான காரணம் தெரியவரும்.

Advertisement