பிபிசி மீது சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு

6


வாஷிங்டன்: மன்னிப்பு கேட்ட போதிலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அவர் 5 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக அறிவித்தார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பான ஒரு ஆவண படத்தை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பி.பி.சி., திருத்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த, புகாரில், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த நிறுவனம் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
ஆனாலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடுப்போம். அடுத்த வாரத்தில் 5 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) வரை நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் மீது வழக்கு தொடர் இருக்கிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.


அவர்கள் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் ஏமாற்றினர். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை அவர்கள் மாற்றினர். இது மிகவும் மோசமானது. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், மற்றவர்களுக்கு இது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியாது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement