ஜடேஜாவின் மாயாஜாலம்... சுழலில் சிக்கியது தென் ஆப்ரிக்கா

1

கோல்கட்டா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அபாரமாக பந்து வீசியுள்ளது. இதனால், அந்த அணி 93 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து பேட் செய்த இந்திய முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்திருந்தது.

2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய கேஎல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் (29), கேஎல் ராகுல் (39), பன்ட் (27), ஜடேஜா (27), அக்ஷர் படேல் (16) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

30 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஜடேஜா சுழல் மாயஜாலத்தை காட்டினார். ரிக்கில்டன் (11), மார்க்ரம் (4), முல்டர் (11), ஜோர்ஷி (2), ஸ்டப்ஸ் (5), வெரேனே (9), ஜான்சென் (13) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 93 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் பவுமா (29) மட்டும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

ஜடேஜா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தென் ஆப்ரிக்கா அணி 63 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement