மொபைல் போன்கள் தொலைந்தால் 'சஞ்சார் சாதி' இணையதளம் வாயிலாக மீட்கலாம்

3

சென்னை: 'சஞ்சார் சாதி' இணையதளம் வாயிலாக, தமிழகத்தில், 36 சதவீத மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உள்ளதாக, தொலைத்தொடர்பு துறையின் தமிழக துணை இயக்குநர் ஜெனரல் சுதாகர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நாட்டில் மொபைல் போன் திருட்டு அதிகரித்து வருகிறது. மொபைல் போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் புகார் அளித்து மீட்கும் வகையில், 'சஞ்சார் சாதி' என்ற இணையதளத்தை, மத்திய தொலைத்தொடர்பு துறை உருவாக்கியுள்ளது.

இதன் வாயிலாக தினமும் புகார்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த இணையளத்தில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன. மொபைல் போன் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ, அதுபற்றி நீங்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

அடுத்து, உடனடியாக யாரும் பயன்படுத்தாக வகையில், அந்த மொபைல் போன், 'பிளாக்' செய்யப்படும். உங்கள் பெயரில் யாராவது தெரியாமல், 'சிம் கார்டு' வாங்கியிருந்தாலும் புகார் அளிக்க முடியும். வேண்டாத சிம் கார்டையும் நிரந்தரமாக நீக்க முடியும்.

சிலர் சந்தையில், பழைய மொபைல் போன்களை புதிது போல விற்கின்றனர். இதை தெரிந்து கொள்ள இணையதளத்தில், ஐ.எம்.இ.ஐ., எண்ணை உள்ளீடு செய்தால் போதும்; அதன் அனைத்து விபரமும் கிடைத்து விடும்.

வெளிநாட்டில் இருந்து வரும் தேவையற்ற அழைப்புகள், மோசடிக்காரர்களின் எண்களையும், சிரமமில்லாமல் கண்டுபிடிக்கலாம். கூடுதல் சிறப்பாக, எப்.எப்.ஆர்.ஐ., எனும் அம்சம் உள்ளது. உண்மையாகவே வங்கியில் இருந்து தான் தொடர்பு கொள்கின்றனரா என்பதை ஆராய முடியும். தற்போது, பெரும்பாலான வங்கிகள், இதில் இணைந்து வருகின்றன. வரும் நாட்களில் நிதிசார் குற்றங்கள் குறையும். வாடிக்கையாளர்களும் ஏமாறாமல் இருப்பர். கூடுதல் விபரங்களை, www.sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@ மொபைல் போன் திருட்டு 1.83 லட்சம் புகார்கள் தமிழகத்தில், 2023 மே மாதத்தில் இருந்து தற்போது வரை, மொபைல் போன்கள் திருடு போனதாக, 1.83 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இதுவரை, 41,229 மொபைல் போன்கள், போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மொபைல் போன் மீட்பு விகிதத்தில், நாட்டில் ஒன்பதாவது இடத்தில் தமிழகம் உள்ளது. *** செயல்பாட்டில் 35,655 '5ஜி டவர்'கள் பொது மக்களுக்கு நீடித்த மற்றும் சிரமமில்லா தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கிராமங்கள் துவங்கி நகரங்கள் வரை, தொலைத்தொடர்பு சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 5,297 கிராமங்களில், '5ஜி டவர்'கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை தமிழகம் முழுதும், 35,655 '5ஜி டவர்'கள் செயல்பாட்டில் உள்ளன. ***block_B

Advertisement