பக்கத்துக்குப் பக்கம் தகவல் பெட்டகம்

தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அதை உடன் அடுத்தும் பிறந்த தமிழ் பத்திரிகைகளின் இரண்டு முக்கிய வழிவகைகள் தேசியமும் தெய்வீகமும். இன்றுவரை அந்த மரபை பின்பற்றி வருகிறது முக்கால் நூற்றாண்டு 'தினமலர்' நாளிதழ்.

இந்த நாளிதழின் ஆசிரியர்களை, நிர்வாகிகளை அறிந்துகொள்வதற்கு முன்பிருந்தே நான் இதன் வாசகன்.

அமரர் இரா. கிருஷ்ணமூர்த்தி, தினமலர் ஆசிரியர் என்று ஒருபுறம் இருக்க, நாணயவியல் துறையில் ஒரு வல்லுனராகவும் மறுபுறம் இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு, என் பிறந்தநாளை ஒட்டிய புத்தக வெளியீட்டு விழா, சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஒட்டலில் நடைபெற்ற போது, கிருஷ்ணமூர்த்தி அவர்களையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். அவர் அந்த நூலுக்கு அருமையான மதிப்புரை வழங்கினார். வேறு பல சந்தர்ப்பங்களிலும் நாங்கள் சந்தித்துக் கொண்டது உண்டு.

'தினமலர்' சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் பதிப்பாளருமான ஆர். லக்ஷ்மிபதி அவர்களை நன்கு அறிவேன். அவர் 'பி.டி.ஐ' செய்தி நிறுவனத் தலைவராகவும் மதுரை கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தவர். கல்வித் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இப்போது, அவரது பேரன் பொறுப்பில் உள்ள தாமரை பிரதர்ஸ் மீடியா என்ற பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறேன்.

'தினமலர்' நாளிதழின் பல பகுதிளை ஆர்வத்துடன் படித்துவருகிறேன் 'இதே நாளில் அன்று' என்ற பகுதி வரலாற்றை சொல்கிறது, உரத்த சிந்தனைப் பகுதி சமூக அவலங்களை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டி வருகிறது. 'இது உங்கள் இடம்' என்ற பகுதி வாசகர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

'வாரமலர்' இணைப்பில் வெளிவரும் அந்துமணியின் பார்த்ததும், கேட்டதும், படித்ததும் பகுதியில் அரிய தகவல்களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். வாசகர்களுடனான சுற்றுலாவும் அது பற்றிய கட்டுரைகளும் 'வாரமலர்' இதழின் தனிச் சிறப்பு. சிறுகதைகளும் அபாரம். என்.சி. மோகன்தாஸ் என்கிற எழுத்தாளர் 'தினமலர்' படைப்புகள் மூலம்தான் எனக்கு அறிமுகமானார். புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் தினமலர் வாரமலரில் சில அருமையான கட்டுரைகளை எழுதிவந்தார். அவை பொக்கிஷங்கள்.

ஒரு கட்டம் வரை முதல் பக்கத்தில் முதன்மை செய்திக்கு எட்டு காலம் தலைப்பு கொடுத்துவந்த 'தினமலர்' பின்னர் ஒற்றை வார்த்தையில் நின்றது, அது மிகச் சிறந்த வார்த்தையாக இருக்கும். ஆனால், கலாம் மறைந்த மறுநாள் நான் ஊகித்தபடியே வந்தது, 'கலாம் காலம் ஆனார்' என்று. அந்த அளவுக்கு நான் தினமலரை பக்கம் பக்கமாக உணர்ந்திருக்கிறேன்.

சிலருக்கு இரு படங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பதும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்தான். அதற்கும் போட்டி நடத்தி பரிசுகள் கொடுப்பது 'தினமலர்' நாளிதழுக்கு வாசகர்களின் மீதான அக்கறையைக் காட்டுகிறது.

'தினமலர்' முதல்முதலாக வெளியிட்ட தீபாவளி மலரின் அட்டைப் பட ஜோக் இன்றும் நினைவில் இருக்கிறது. டாக்டரை பார்க்க வரும் நோயாளி 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார். அப்போது டாக்டர் சொல்வார் 'அப்போ கொஞ்சம் சிரிச்சிட்டு 20 ரூபா ஃபீஸ் குடுத்துட்டு போங்களேன்'.

எந்தப் பக்கத்தை எடுத்தாலும் எந்தப் பகுதியைப் படித்தாலும் வாசகர்களுக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. 'தினமலர்' நாளிதழின் நீண்டகால வாசகர் என்கிற முறையில் இந்த நாளிதழின் தனிச் சிறப்புகளை நினைவில் ஓட்டிக் குறிப்பிடுவது ஒரு வாசகனாக எனக்குப் பெரும் மகிழ்ச்சி தருகிறது. 'தினமலர்' நிர்வாகத்திற்கும் அதன் ஆசிரியர் குழுவுக்கும் சக வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்

'நல்லி' குப்புசாமி செட்டி
தலைவர், நல்லி ஸில்க் குழுமம்

Advertisement