மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்: மர்ம நபர்களும் திருடுவதால் மக்கள் பீதி
திருவாலங்காடு: திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் மேய்ச்சல் ஆடுகளை குறிவைத்து நாய்கள் கடிக்கின்றன. அதேபோல், மர்ம நபர்களும் ஆடுகளை திருடிச் செல்வதால், கால்நடை உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மானாவாரி பயிரிடும் விவசாயிகளின் பிரதான தொழிலாக ஆடு வளர்ப்பு உள்ளது. முன்பு, ஆடு மேய்ப்பதற்கு என்றே தனியாக ஒருவரை நியமித்திருந்தனர். தற்போது, ஆடு மேய்ப்பதற்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், விவசாயிகள் ஆடு மேய்ப்பதற்கான செலவை குறைக்க, அதிக செலவில் கம்பி வேலி அமைக்கத் துவங்கினர். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, மாலையில் சென்று அவற்றை திரும்ப அழைத்து வந்தனர்.
இதன் வாயிலாக, ஆட்கள் கூலியை மிச்சப்படுத்த முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பழையனுார், ராஜபத்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இவை, ஆடுகளை கடிப்பதாகவும், இதனால் ஆடு வளர்ப்பு பாதிப்பதாகவும் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:
மேய்ச்சலுக்கு விட்டால், காலை முதல் மாலை வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய நெருக்கடி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு இல்லாவிட்டால், நாய்களுக்கு ஆடுகள் இரையாகி விடுகிறது.
சொந்த ஆட்கள் வாயிலாக, ஆடுகளை கவனித்தால் பிற வேலைகளை செய்ய முடிவதில்லை. ஆட்களை நியமித்தால் செலவு அதிகரித்து விடுகிறது. ஆடு வளர்ப்பு தொழில் ஊசலாட்டத்தில் உள்ளது.
நாய்கள் கடித்து இறக்கும் மற்றும் காயமடையும் ஆடுகள் குறித்து, அரசின் கவனத்துக்கு முழுமையாக கொண்டு செல்ல முடிவதில்லை. மேலும், மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.