கும்மிடி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் விறுவிறு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புறநோயாளி பிரிவு கட்டுமான பணி வேகமெடுத்து உள்ளது.
கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில், தினசரி 900 - 1100 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறுகிய இடத்தில் புறநோயாளி பிரிவு இயங்கி வருவதால், முறையான மருத்துவ வசதி வழங்க முடியாத நிலை இருந்தது.
அதனால், 7,500 சதுரடி பரப்பளவில், பல்நோக்கு மருத்துவம் கொண்ட புறநோயாளி பிரிவும், அதனுடன், 10 படுக்கை வசதி கொண்ட அவசர சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தமிழக தேசிய சுகாதார இயக்கம் சார்பில், நடப்பாண்டு துவக்கத்தில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக் கி பணி துவங்கப்பட்டது.
இதற்கான கட்டுமான பணிகள் இறுதி கட்டடத்தை எட்டியுள்ளது. இதர பணிகளும், விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது .