அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் இல்லாத அவலம்

பூனிமாங்காடு: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, பூனிமாங்காடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, புறநோயாளிகள், அவசர சிகிச்சை மற்றும் கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

இதனால், பூனிமாங்காடு, நல்லாட்டூர், வெங்கடாபுரம், கோதண்டராமபுரம், தும்பிக்குளம், மிட்டகண்டிகை உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு, காலை 8:00 - மாலை 5:00 மணி வரை, ஒரேயொரு மருத்துவர் மட்டும் சிகிச்சை அளித்து வருகிறார்.

அதன்பின், இரு செவிலியர்கள் மட்டும் தங்கியிருந்து, அவசர சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

இந்த கிராம மக்கள் ஏதாவது அவசர மருத்துவ தேவைக்கு, 15 கி.மீ.,யில் உள்ள திருத்தணி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இரவு நேரத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement