விபத்து இழப்பீடு தராததால் திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி

திண்டிவனம்: திண்டிவனத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் கிருஷ்ணப்பன் மகன் ரங்கப்பன், 30; இவர், 2011ம் ஆண்டு ஏப்., 27ம் தேதி திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு மொபட்டில் வந்தபோது, அரசு பஸ் மோதி இறந்தார்.

இது தொடர்பாக விபத்து இழப்பீடு வழங்கக் கோரி, திண்டிவனம் மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி இறந்த ரங்கப்பன் குடும்பத்தினருக்கு 32 லட்சத்து 61 ஆயிரத்து 20 ரூபாய் இழப்பீடாக வழங்க விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் நஷ்ட ஈடு வழங்காததால், அதே கோர்ட்டில் தீர்ப்பு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, பாதிக்கப்பட்ட ரங்கப்பன் குடும்பத்திற்கு 67 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டுமென கடந்த அக்., 24ம் தேதி தீர்ப்பு கூறினார். மேலும், இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று, கள்ளக்குறிச்சியிலிருந்து திண்டிவனம் வந்த அரசு பஸ்சை கோர்ட் கட்டளை நிறைவேற்றுநர் யுவராஜ் ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத் தார்.

Advertisement