ராமகிருஷ்ணா நகருக்கு அணுகு சாலை கலெக்டரிடம் குடியிருப்பு மக்கள் மனு

திருவள்ளூர்: சென்னை எல்லை சாலை திட்டத்தால், ராமகிருஷ்ணா நகர், பொது போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கும் அபாயம் உள்ளதால், அணுகுசாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

புட்லுார், ராமகிருஷ்ணா நகர் மக்கள், திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு விபரம்:

ராமகிருஷ்ணா நகர் விரிவு, ஐஸ்வர்யா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. பலரும், அங்கு வீடு கட்டி வசித்து வருகிறோம். ராமகிருஷ்ணா நகரில் உள்ள 40 அடி சாலையை பயன்படுத்தி, புட்லுார், அரண்வாயல் சாலைக்கு சென்று வருகிறோம்.

தற்போது, எண்ணுார் - மாமல்லபுரம் வரை, சென்னை எல்லை சாலை திட்டத்தின்படி, நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இச்சாலை, புட்லுார் ராமகிருஷ்ணா நகர் விரிவு பகுதிக்கும், அரண்வாயல் சாலைக்கும் நடுவே அமைக்கப்பட்டு வருகிறது.

இச்சாலை அமைக்கப்பட்டால், ராமகிருஷ்ணா நகர் விரிவு பகுதி, ஐஸ்வர்யா நகர் பகுதியில் வசிப்போர், புட்லுார், அரண்வாயல் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும். ஏற்கனவே நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எங்களுக்கு சுரங்கப்பாதை வழியாக, அணுகுசாலை அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது 40 அடி சாலை வழியாக, சென்னை எல்லை சாலை திட்டத்தில், 'அணுகு சாலை' இல்லை என, ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, 40 அடி சாலையை இணைக்கும் வகையில், அணுகு சாலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமழிசை திருமழிசை பேரூராட்சி அன்புநகர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மலைபோல் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பையை முறையாக அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, திருமழிசை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, அன்புநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று முன்தினம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Advertisement