'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது

மதுரை: மது அருந்தி நிதானமின்றி 'டூவீலர்' ஓட்டி விபத்தில் சிக்கி முகத்தில் அடிபடும் இளைஞர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது.


டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினால் தற்காப்புக்காக அனிச்சை செயலாக கைகளை முகத்தின் முன்பாக கொண்டு செல்வதுண்டு. மது அருந்திய பின் நிதானம் இல்லாத நிலையில் விபத்தில் சிக்கும் போது, முகம் நேரடியாக தரையில் படும் போது பற்கள், தாடை எலும்பு நொறுங்குவதோடு உடலிலும் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.


பல் மருத்துவப் பிரிவில் மட்டும் வாரம் 50 பேர் வரை அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். காயம் அடைபவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். சிறிய அறுவை சிகிச்சை முதல் 'பிளேட்டிங்' பொருத்துவது வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறோம் என்கிறார் பல் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் அனிதா.


அவர் கூறியதாவது: விபத்தில் சிக்கும் போது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சிகிச்சையில் இருப்பதால் வேலை இழப்பால் அவர்களின் வருமானம் குறைகிறது. குடும்பத்தினரிடம் நிம்மதி குறைகிறது. பற்கள் உடைந்திருந்தால் கம்பி கட்டி சரிசெய்கிறோம். பலருக்கு தாடை எலும்பை 'பிளேட்டிங்' மூலம் சரிசெய்கிறோம். இதற்கென பத்து படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக வார்டு உள்ளது. முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


விடுமுறையில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு பல்சொத்தை அதிகரித்து வரும் நிலையில் மாதம் 20 மாணவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். காலாண்டு, அரையாண்டு விடுமுறையில் மட்டும் சிகிச்சைக்கு வருவோர் அதிகம். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது அவசியம். குழந்தைப்பருவத்தில் பல்சொத்தை வரக்காரணம் உணவுப்பழக்கம் தான். இனிப்புகள் மட்டுமின்றி அதிக மாவுத் தன்மையுள்ள, பிசுபிசுப்பு தன்மையுள்ள உணவை சாப்பிடும் போது பற்களின் இடுக்குகளில் அவை ஒட்டிக் கொள்ளும்.

மாவுப்பொருள் படிமானம் போல படிந்து பல்சொத்தை பாக்டீரியா உருவாகக் காரணமாகி விடும் என்றார்.

Advertisement