மானாமதுரை நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை இல்லை: தகவல் அறியும் சட்டத்தில் பதில்

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் தினமும் பொது மக்களை நாய்கள் கடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடந்த 3 ஆண்டாக நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள தெருக்களில் நாய்கள், கால்நடைகள் சுற்றி திரிகின்றன.

ரோட்டில் திரியும் மாடுகளால் பலர் விபத்தில் சிக்கி உள்ளனர். நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டாலும் ரோட்டில் மாடுகள் திரிவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் சமீப காலமாக ரோட்டில் திரியும் தெரு நாய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிலர் ரேபிஸ் நோய் தாக்கியும் இறந்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது சில இடங்களில் மட்டும் சில நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்துகின்றனர்.

இந் நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மானாமதுரை நகராட்சியில் தகவல் அறியும் சட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று ஒருவர் கேட்டிருந்த நிலையில் கடந்த மாதம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் தெருவில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் தெருக்களில் திரியும் நாய்களுக்கு எவ்வித கருத்தடை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் கூட குலாலர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனையும் அதற்கு முன் 10க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்துள்ளது.

Advertisement