முத்துசாமி சதம்...இந்தியா பரிதாபம்: தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்

கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். முத்துசாமி சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி வலுவான ஸ்கோரை எட்டியது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 247/6 ரன் எடுத்திருந்தது.


'வால்' ஆட்டம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் தடுமாற, தென் ஆப்ரிக்க 'டெயிலெண்டர்கள்' எளிதாக ரன் எடுத்தனர். பேட்டிங் வரிசையில் 7-11 வீரர்கள் சேர்ந்து 243 ரன் குவித்தனர். சேனுரன் முத்துசாமி, கைல் வெரைன் 7வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்தனர். முத்துசாமி, 48 ரன் எடுத்த நிலையில், ஜடேஜா பந்தை 'ஸ்வீப்' செய்ய முயன்றார். அப்போது, எல்.பி.டபிள்யு., கேட்டார். கள அம்பயர் ராட் டக்கர் (ஆஸி.,) 'அவுட்' கொடுத்தார். உடனே முத்துசாமி 'ரிவியு' செய்தார். 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பத்தில், பந்து லேசாக 'கிளவுசை' உரசிச் சென்றது தெரிய வர, 'டிவி' அம்பயர் கிறிஸ் கபானி (நியூசி.,) 'நாட் அவுட்' என அறிவித்தார். இதனால் கண்டம் தப்பிய முத்துசாமி, அபார ஆட்டத்தை தொடர்ந்தார். ஜடேஜா 'சுழலில்' கைல் (45) சிக்கினார்.


யான்சென் விளாசல்: அடுத்து வந்த யான்சென்-முத்துசாமி சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்தனர். சிராஜ் பந்தில் 2 ரன் எடுத்த முத்துசாமி, டெஸ்டில் முதல் சதம் அடித்தார். இவர், 109 ரன்னுக்கு (10x4, 2x6) சிராஜ் 'வேகத்தில்' அவுட்டானார். ஜடேஜா ஓவரில் 2 சிக்சர் விளாசிய யான்சென், ஸ்கோரை விரைவாக உயர்த்தினார். பும்ரா பந்தில் ஹார்மர் (5) போல்டானார். சிறிது நேரத்தில் குல்தீப் 'சுழலில்' போல்டான யான்சென் (93 ரன், 91 பந்து, 6x4, 7x6) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், 4 விக்கெட் வீழ்த்தினார்.


கடின சவால்: பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (7*), ராகுல்(2*) நிதான துவக்கம் தந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9/0 ரன் எடுத்து, 480 ரன் பின்தங்கியிருந்தது. இன்று இந்திய பேட்டர்கள் பொறுப்பாக ஆடினால் மட்டுமே தென் ஆப்ரிக்க பிடியில் இருந்து தப்ப முடியும்.



சிக்சர் மன்னன்
ஏழு சிக்சர் அடித்தார் யான்சென். டெஸ்டின் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (7) அடித்த தென் ஆப்ரிக்க வீரர் பட்டியலில் முதலிடத்தை டிவிலியர்ஸ் (எதிர், ஆஸி., 2009, கேப்டவுன்), குயின்டன் டி காக் (எதிர், வெ.இ., கிராஸ் ஐலெட், 2021) உடன் பகிர்ந்து கொண்டார்.


* இந்தியாவில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் யான்சென் முதலிடம் பெற்றார். அடுத்த இடத்தை தலா 6 சிக்சருடன் வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (1974, டில்லி), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (2001, சென்னை) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

* டெஸ்ட் பேட்டிங் வரிசையில் 9 அல்லது அதற்கு கீழ் களமிறங்கி 90+ ரன்களில் அவுட்டான முதல் தென் ஆப்ரிக்க வீரரானார் யான்சென். ஒட்டுமொத்தமாக 11வது வீரர். இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது வீரர். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 99 ரன்னில் (மொகாலி, 2013) அவுட்டானார்.

என்ன தவறு

இந்திய பவுலர்கள் நேற்று 'டி-20' பாணியில் ரன்னை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசினர். இதனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. குல்தீப் சற்று வேகமாக பந்தை சுழற்றினார். இதை முத்துசாமி, யான்சென் கணித்து ஆடினர். கேப்டன் ரிஷாப் பன்ட் தற்காப்பு முறையிலான 'பீல்டிங்' வியூகம் அமைத்து தவறு செய்தார். சுழலுக்கு சாதகமான களத்தில் மட்டுமே ஜடேஜா (2/94, 28 ஓவர், வாஷிங்டன் சுந்தரின் (0/58, 26 ஓவர்) பந்துவீச்சு எடுபடும் என்பது மீண்டும் நிரூபணமானது.
குல்தீப் யாதவ் கூறுகையில்,''கோல்கட்டா களத்துடன் ஒப்பிடுகையில் கவுகாத்தி ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டது. நேரான சாலையில் பந்துவீசுவது போல மந்தமாக இருந்தது. பவுலர்களுக்கு கடினமானது. சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. வேகப்பந்துவீச்சும் எடுபடவில்லை. பேட்டர்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும்,''என்றார்.


மூன்றாவது வீரர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், பேட்டிங் வரிசையில் 7 அல்லது அதற்கு கீழ் களமிறங்கி சதம் அடித்த மூன்றாவது தென் ஆப்ரிக்க பேட்டர் ஆனார் முத்துசாமி (7வது இடம்). இதற்கு முன் குயின்டன் டி காக் (7வது இடம், 111, விசாகப்பட்டனம், 2019), குளூஸ்னர் (9வது இடம், 102, கேப்டவுன், 1997) சதம் அடித்திருந்தனர்.


151.1 ஓவர்
இந்திய அணி 151.1 ஓவர் பந்துவீசியது. ஒரு இன்னிங்சில் இந்திய அணியின் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களும் 25 ஓவருக்கு மேல் வீசியது இதுவே முதல் முறை. 2017, ஜனவரிக்கு ஒரு இன்னிங்சில் 150 + ஓவர் வீசியது 3வது முறை. இதற்கு முன் இங்கிலாந்து (190.1 ஓவர், 2021, சென்னை), ஆஸ்திரேலியாவுக்கு (167.2, ஆமதாபாத், 2023) எதிராக அதிக ஓவர் வீசியது.


ஞாபகம் வருதே
இந்திய மண்ணில் கடைசியாக எதிரணி 450+ ரன் எடுத்தும் இந்தியா வென்ற சம்பவம் 2016ல் சென்னை டெஸ்டில் அரங்கேறியது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன் குவித்தது. பின் கருண் நாயர் 303 ரன் எடுக்க, இந்தியா 759/7 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சில் ஜடேஜா 7 விக்கெட் சாய்க்க, இந்தியா 75 ரன்னில் வென்றது. கவுகாத்தி செம்மண் ஆடுகளம் முதல் இரு நாள் நன்றாக இருக்கும். பின் வெடிப்புகள் ஏற்பட துவங்கும். இதை பயன்படுத்தி ஜடேஜா மீண்டும் 'மேஜிக்' நிகழ்த்துவாரா...


* எதிரணி முதல் இன்னிங்சில் 489+ ரன் அதிகம் எடுத்து 2003ல் வென்றது. அடிலெய்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 556 ரன் எடுத்தது. இந்தியா 4 விக்கெட்டில் வென்றது.

நாகப்பட்டின நாயகன்

தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் சேனுரன் முத்துசாமி, 31. தென் ஆப்ரிக்காவின் டர்பனில் பிறந்தார். 2019ல் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். பேட்டிங் 'ஆல்-ரவுண்டரான' இவர், சுழற்பந்துவீச்சிலும் அசத்துவார். 8 டெஸ்டில் 388 ரன், 22 விக்கெட் சாய்த்துள்ளார். டெஸ்டில் முதல் சதம் அடித்தார். தனது பூர்விகமான இந்தியாவுக்கு எதிராக அசத்தி வியக்க வைத்தார்.

முத்துசாமி கூறுகையில்,''எனது கிரிக்கெட் பயணம் வினோதமானது. 2019ல் நடந்த இந்திய தொடரில் அறிமுகமானேன். அப்போது டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்கா இழந்த நிலையில், இனி இந்திய மண்ணில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்தனர். தற்போது சதம் அடித்தது மகிழ்ச்சி. இந்திய பாரம்பரியத்தை சார்ந்தவன். நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர்களை சந்திக்க எனது அம்மா செல்வது வழக்கம். நான் இதுவரை அங்கு சென்றதில்லை,''என்றார்.

Advertisement