ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்
ஈரோடு:கோவையில் இருந்து ஏற்கனவே ஈரோடு வழியே சேலத்துக்கு 'மெமு' ரயில் பகலில் இயக்கப்பட்டது. ஆனால் மக்களிடையே வரவேற்பு இல்லாததால், 4 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது.
அதன் பின் நீண்ட நாட்களாக பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், கோவை-சேலம் இடையே ஈரோடு வழியே ரயில் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஈரோடு-சேலம் இடையே புதிதாக, இன்று முதல் 'மெமு' ரயிலை இயக்குகிறது. இதனால் கோரிக்கை விடுத்த அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் இருந்து இன்று காலை, 6:15 மணிக்கு கிளம்பி மகுடஞ்சாவடி, சங்ககிரி, காவிரி ஆர்.எஸ். வழியே ஈரோட்டுக்கு, 7:25க்கு வரும். மறு மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து இரவு, 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு, 8:45 மணிக்கு சேலம் சென்றடையும். வியாழக்கிழமை மட்டும் இயங்காது. சேலம்-ஈரோடு இடையே கட்டணம் ரூ.20.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஈரோட்டில் பணி முடித்து இரவு சேலம் மட்டுமின்றி வழித்தட ஊர்களுக்கு செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும். கட்டணமும் மிக குறைவு. இவ்வாறு கூறினர்.