எஸ்.ஐ.ஆர். படிவம் வினியோகம் நிறைவு
திருப்பூர்:இன்னும் பத்து நாட்களே உள்ள அவகாசம் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தீவிரத் திருத்த படிவம் வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பூர்த்தி செய்து பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி
தீவிரமடைந்துள்ளது.
தமிழகம் உள்பட ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில், வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று, தீவிர திருத்த படிவம் வழங்கும் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) 2,536 பேர், வாக்காளர் வீடு தேடிச் சென்று படிவம் வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிச. 4 கடைசி நாள்
பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க, வரும் டிச. 4ம் தேதி கடைசிநாள். இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது மற்றும் பெறப்படும் படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மாவட்டத்தில், இறந்த வாக்காளர், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர் தவிர மற்ற அனைத்து வாக்காளர்களுக்கும், தீவிர திருத்த படிவம் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களும் தகவல் அறிந்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகின்றனர்.
தொகுதிக்கு ஒருவர் வீதம் வாக்காளர் பதிவு அலுவலர் 8 பேர்; 27 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 266 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் மற்றும் வருவாய்த்துறை, கூட்டுறவு, வட்டார வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி, வேளாண், தோட்டக்கலைத்துறை என, பல்வேறு அரசு துறையினர், இரவு பகல் பாராமலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களிலும், முழு வீச்சில் தீவிர திருத்த படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
படிவம் சமர்ப்பிக்காவிட்டால் பெயர் இடம் பெறாது
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை பெற்று, ஆன்லைனில் பதிவேற்றும் பணிகளில், ஒட்டுமொத்த அரசு அலுவலர்களும் ஈடுபட்டுவருகின்றனர். வாக்காளர் அனைவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,க்களிடம் விரைந்து வழங்கவேண்டும். டிச. 4ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்காதபட்சத்தில், டிச. 9ல், வெளியாகும் வரைவு பட்டியலில் பெயர் இடம்பெறாது. மீண்டும் மேல்முறையீடு செய்து, படிவம் 6 வழங்கி, பட்டியலில் சேரவேண்டிவரும்.
தேர்தல் கமிஷன் நிர்ணயித்தபடி, டிச. 4க்குள், அனைத்து படிவங்களும் பெறப்பட்டு, வெற்றிகரமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். https://voters.eci.gov.in/login என்ற தளத்தில், மொபைல் எண், ஒ.டி.பி., வழங்கி, நுழையவேண்டும்; மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அளித்தால், பி.எல்.ஓ.விடம் வழங்கிய படிவம், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்
ஆன்லைன் பதிவுசிக்கல் இல்லை
தேர்தல் கமிஷனின் டில்லி தொழில்நுட்ப குழுவினர், தினமும் காலை முதல் மாலை வரை, 'கூகுள் மீட்' வாயிலாக இணைந்திருக்கின்றனர். தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்கள், பிரச்னைகள், மென்பொருள் சார்ந்த பிரச்னைகள், உடனுக்குடன் களையப்பட்டுவருகிறது. வாக்காளர் வசதிக்காக, தீவிர திருத்த படிவத்தை ஆன்லைனிலேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதியை https://voters.eci.gov.in/ வாயிலாக, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிவருகிறது. ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் துல்லியமாக இருக்கவேண்டும்; வாக்காளர் எண்ணுடன், மொபைல்போன் எண் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இத்தகைய வாக்காளர்கள், மிக சுலபமாக ஆன்லைனிலேயே தீவிர திருத்த படிவத்தை சுலபமாக பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கலாம்.
வாக்காளர் பலருக்கு, பெயருக்கு பின்னால் கிடைமட்ட கோடு (-) சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆதார் - வாக்காளர் அட்டையில் பெயர் துல்லியமாக இருந்தாலும்கூட, பெயருக்கு பின்னால் உள்ள கோடு காரணமாக, வாக்காளர்கள், ஆன்லைனில் சுயமாக படிவம் பூர்த்தி செய்ய முடியாத நிலை நீடித்துவந்தது. தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, தற்போது இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெயரில் வேறு முரண்பாடுகள் இன்றி, கூடுதலாக கோடு மட்டும் இருப்பின், அந்த வாக்காளர்களும் இனி, ஆன்லைனில் படிவம் சமர்ப்பிக்கமுடியும். இத்தகவலை தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்