ரயில்வே ஸ்டேஷனுக்கு வழித்தடத்துடன் காளை மாட்டு சிலை சிக்னல் விரிவாக்கம்

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே காளைமாட்டு சிலை சிக்னல் பகுதி உள்ளது.
காந்திஜி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, கொல்லம்பாளையம் பகுதி சாலை என மூன்று பகுதி சாலைகளின் வாகனங்கள் வந்து செல்கின்றன.


இப்பகுதியில் மூன்று சாலைகளின் வாகனங்களும் நின்று செல்ல, தானியங்கி போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்நிலையில் காளை மாட்டு சிலை பின்புறம் ரயில்வே நிர்வாகத்தால் அம்ரித் பாரத் திட்டத்தில், ரயில்வே ஸ்டேஷன் செல்ல வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முன்புறம் நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்களில் வரும் ரயில் பயணிகளின் வசதிக்காகவும் இந்த நுழைவுவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இங்கிருந்து டூவீலர்கள் மட்டுமின்றி பஸ், கார், லாரி உள்ளிட்ட அனைத்து ரக வாகனங்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று சிக்னலுடன், நான்காவதாக ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயில் பகுதிக்கும் சிக்னல் அமைகிறது. அதாவது இனி காளை மாட்டு சிலை பகுதி நான்கு வழி சாலையாக மாற்றப்படும். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே நுழைவு வாயில் திறக்கப்பட்டவுடன் சில தினங்கள் வரை அப்பகுதியில் வந்து செல்லும் வாகனங்களை கணக்கெடுத்து அதற்கேற்ற வகையில் சிக்னல் அமைக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Advertisement