சேறும் சகதியுமான சாலை நாற்று நடும் போராட்டம்
கடலுார்: சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
கடலுார் ஊராட்சி ஒன்றியம், பச்சையாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட, மணக்குப்பத்தில் 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
குறிப்பாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அங்கன்வாடி மையம் எதிரில் நேற்று காலை 9:30 மணிக்கு நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதனை ஏற்ற கிராம மக்கள் 10:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.