செல்ல நாய்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க லண்டன் நகரமே வண்ணமயமாகவும் உற்சாகமாகவும் மாறும். அந்த உற்சாகத்தைக் கூட்டும் வகையிலான ஒரு கலகலப்பான நிகழ்வுதான், மத்திய லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் நாய்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு
வருடத்தில் ஒரு நாள் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நெருக்கமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நாய்கள் பெரும்பாலவை வீட்டில் இருந்து விரட்டப்பட்ட அல்லது தெருவில் விடப்பட்ட நாய்களாகும்.
ஏதோ காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நாய்களை காப்பகத்தை சேர்ந்தவர்கள் எடுத்து பராமரித்து வளர்க்கின்றனர் இந்த நாய்களை தத்தெடுக்க விரும்புபவர்களுக்கு கொடுத்தும் வருகிறது.அப்படி தத்தெடுத்த நாய்களை பெருமையாக இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள வைப்பதற்காக காப்பகங்கள் நடத்திய இந்த நிகழ்வு கடந்த சில வருடங்களாக பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்றுவிட்டது.
இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான நாய்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையின் அடையாளமான வண்ணமயமான, அலங்காரமான சிவப்பு ஸ்வெட்டர்களை அணிந்து தங்கள் உரிமையாளர்களுடன் பெருமிதத்துடன் நடந்து சென்றன.
இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் நாய்கள் அணிவதற்காகவே பிரேத்யேகமாக ஆடைகள் தைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக விற்பனை செய்யப்பட்டது.சில உரிமையாளர்கள் தங்கள் செல்லங்களுக்காக கூடுதலாக பணம் செலவிட்டு அவர்களே வித்தியாசமான உடைகள் தயாரித்து இருந்தனர்.அணிவகுப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நாய்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நாயும் அணிந்திருந்த உடைகள் தனித்துவமானவை. சாண்டா கிளாஸ் தொப்பிகள், பனிமனிதன் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்வெட்டர்கள், மின்னும் விளக்குகள் பொருத்தப்பட்ட உடைகள் என நாய்கள் போட்டியிட்டுக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த உல்லாச அலங்காரங்களைக் காண, சுற்றுலாப் பயணிகள் மற்றும் லண்டன் வாசிகள் திரளாகக் கூடினர்.
இந்த நிகழ்ச்சி வெறும் வேடிக்கைக்காக மட்டும் நடத்தப்படவில்லை. லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விலங்கு மீட்பு அமைப்புகளுக்கு நிதியுதவி திரட்டுவது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், வீடற்ற விலங்குகளைத் தத்தெடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அணிவகுப்பு உதவியது.
ஒருபுறம் கிறிஸ்துமஸ் உற்சாகத்தைத் தூண்டுவதுடன், மறுபுறம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பான பிணைப்பை வெளிப்படுத்துவதாகவும், சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமைந்தது.
-எல்.முருகராஜ்
மேலும்
-
விண்வெளித் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள்; சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை
-
மனித உரிமைகளுக்கான கட்டமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; ஜனாதிபதி பெருமிதம்
-
பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது
-
மனநோயை துாண்டும் மரபணு கண்டுபிடிப்பு!
-
சொந்தமாக்கிக்கொள்ள ஒரு ரோபோ -கார்!
-
இரண்டு கருந்துளைகள் இணைய முடியுமா?