கேரளா உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு; பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க ஒன்று என அம்மாநில பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரிதல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி இருக்கிறது.

இந் நிலையில் திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் பாஜ வென்றுள்ளதை அக்கட்சியினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பாஜ வெற்றி குறித்து அம்மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது;

மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பாஜவினருக்கும் இது ஒரு வரலாற்று வெற்றியாகும். அரசியலில், ஓட்டு வங்கியிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். பாஜ, தேசிய ஜனநாயக கூட்டணியானது, எல்டிஎப் மற்றும் யுடிஎப் ஆகியவை வலுவாக உள்ள பகுதிகளில் வெற்றியை பெற்றுள்ளது.

வரவுள்ள சட்டசபை தேர்தலில் யுடிஎப் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையேதான் போட்டி. நாங்கள் எப்போதும் எல்டிஎப் கூட்டணியின் ஊழல் மற்றும் தவறான அரசு நிர்வாகத்தை வெளிக்கொணர்ந்தோம்.

காங்கிரஸ், இடதுசாரிகள் என்ற ஊழல் இரட்டையர்களிடம் இருந்து எந்த நற்சான்றிதழும் தேவையில்லை. நான் இந்த கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

Advertisement