கால்பந்து வீரர் மெஸ்ஸி நிகழ்ச்சியில் கலவரம்; கொல்கட்டா மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்

கொல்கட்டா: உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பங்கேற்ற அவரது சிலை திறப்பு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அதிக கட்டணம் செலுத்தியும் அவரை காண முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தை சூறையாடினர்.


தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தேசிய கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி. வரலாற்றிலேயே சிறந்தவர் என்பதை குறிக்கும் வகையிலான 'கோட்' என்ற அடை மொழியுடன் இவரை ரசிகர்கள் அழைக்கின்றனர். மெஸ்ஸிக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


சுற்றுப் பயணம் இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், 'கோட் இந்தியா டூர் 2025' என்ற பெயரில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மெஸ்ஸி நேற்று இந்தியா வந்தார்.


நான்கு நகரங்களில் ரசிகர்கள் சந்திப்பு, சிறப்பு போட்டி, பிரபலங்களுடன் விருந்து ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் அவரது 70 அடி உயர சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை, 'சதாத்ரு தத்தா இனிஷியேட்டிவ்' என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.


சிலை திறப்பை தொடர்ந்து, ரசிகர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, ரசிகர்களிடம், 4,500 - 10,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தது.


சந்திப்பு ரத்து சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பாதுகாவலர்கள் என ஏராளமானோர் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டதால், காலை முதலே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களால் அவரை காண முடியவில்லை.


மைதானத்தில் இருந்த பெரிய திரைகளிலும் அவர் தெரியவில்லை. ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, சில மணி நிமிடங்களிலேயே, மெஸ்ஸி மைதானத்தில் இருந்து
புறப்பட்டார்.


இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ரசிகர்கள், அங்கிருந்த நாற்காலிகள், பந்தல்களை அடித்து நொறுக்கினர். ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தை, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த கலவரத்தால் பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது.


மெஸ்ஸி மைதானத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டதே கலவரத்துக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெஸ்சி பங்கேற்க உள்ள ஆந்திராவின் ஹைதராபாத், மஹாராஷ்டிராவின் மும்பை, தலைநகர் டில்லி ஆகிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


@quote@ 'மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிர்வாக கோளாறால், அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்த சம்பவத்துக்காக மெஸ்ஸியிடமும், விளையாட்டு ரசிகர்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். விழாவில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். மம்தா பானர்ஜி, முதல்வர், மேற்கு வங்கம்quote


@block_B@ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது! மெஸ்ஸி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முதன்மை ஏற்பாட்டாளரான சதாத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். அவர் ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தை திரும்ப தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததாக மேற்கு வங்க போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.block_B


@block_B@ பா.ஜ., தாக்கு பா.ஜ., நிர்வாகியும், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், 'மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சூழ்ந்துகொண்டு திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே செல்பி எடுத்துக் கொண்டனர். பல ஆயிரம் ரூபாய் பணம் கட்டி வந்தவர்களால் மெஸ்ஸியை பார்க்க கூட முடியவில்லை. அதனால் தான் ரசிகர்களால் ஆத்திரமடைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அவமானமான விஷயம்' என தெரிவித்துள்ளார்.block_B

Advertisement