பா.ஜ., முன்னாள் நிர்வாகி குடும்பத்தினரை துன்புறுத்த தடை

1

சென்னை: 'பா.ஜ., முன்னாள் நிர்வாகியான கே.ஆர்.வெங்கடேஷ் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது' என, காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பா.ஜ.,வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலராக கே.ஆர்.வெங்கடேஷ் இருந்தார். இவர் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஜூனில், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தன் குடும்பத்தினரை, போலீசார் துன்புறுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ''மனுதாரர் மீது இரண்டு ஆண்டுகளாக எவ்வித வழக்கும் பதிவாகவில்லை. இருப்பினும், குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்துகின்றனர்,'' என்றார்.

போலீசார் தரப்பில், 'மனுதாரர் மீது ஆந்திரா, தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவரது வீட்டுக்கு போலீசார் செல்கின்றனர்' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, 'மனுதாரரின் குடும்பத்தி னரை துன்புறுத்தக் கூடாது' என போலீசாருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisement