பார்லியில் எந்த விஷயம் குறித்தும் விவாதிக்க தயார்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ திட்டவட்டம்

7


புதுடில்லி: ''பார்லிமென்டில் எந்த விஷயங்கள் குறித்தும் விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து பிரதமரைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

டில்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் சித்தாந்தத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை; ராகுல் இடதுசாரி சித்தாந்தத்தையோ அல்லது அவரது கட்சி விரும்பும் வேறு எந்த சித்தாந்தத்தையோ பின்பற்றலாம்.


ஆனால் நாங்கள் நாட்டிற்காகப் பணியாற்றுகிறோம். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் காங்கிரஸ் பேரணியில் பேசுவது, இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துக்களை நாங்கள் பார்த்ததில்லை. நாங்கள் எதிரிகள் அல்ல.

ஏற்றுக்கொள்ள முடியாது



வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நாட்டிற்காகப் பணியாற்றுகிறோம். 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளோம். இந்தியாவை வலிமையானதாகவும், பெருமைக்குரியதாகவும் மாற்றுவதே பிரதமர் மோடியின் கனவு.


இந்த சூழலில் பிரதமர் மோடி குறித்து பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்லிமென்ட் கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் மனிதாபிமானம் மிச்சமிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நாடும் மக்களும் முக்கியம் என்று நினைத்தால், அவர்கள் தாமதிக்கக் கூடாது.

மிகுந்த வேதனை




லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டின் எதிர்க்கட்சித் தலைவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ., தலைமையிலான தேஜ கூட்டணியினர் ஒருபோதும் யாரையும் அவமரியாதை செய்ததில்லை. யாருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்ததில்லை. உலகமும் நாடும் பிரதமர் மோடியை அங்கீகரிக்கின்றன.


அப்படியிருக்க, எதிர்க்கட்சித் தலைவர் பிரதமருக்கு மிரட்டல் விடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. வெறுமனே இதைக் கண்டிப்பதால் மட்டும் பயனில்லை. பார்லிமென்டில் எந்த விஷயங்கள் குறித்தும் விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து பிரதமரைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

Advertisement