வர்த்தக துளிகள்

புத்தாண்டு முதல் டிவி விலை உயரும்





மெமரி சிப்களின் பற்றாக்குறையால் விலை அதிகரிப்பு காரணமாகவும் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும் வரும் ஜனவரியில் இருந்து டிவி விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு, தொடர் வீழ்ச்சி கண்டு, ஒரு டாலர் 91 ரூபாயை நெருங்கியுள்ளது. இதனால், டிவி தயாரிப்பில் முக்கிய உதிரி பாகங்களான, ஓபன் செல்கள், செமிகண்டக்டர் சிப்கள், மதர்போர்டுகள் விலை அதிகரித்துள்ளதால், தயாரிப்பு செலவு உயர்ந்துள்ளது. இது, டிவியின் விலையில் எதிரொலிக்கும் என தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

மின் வாகன உதிரி பாகங்கள்உள்நாட்டில் தயாரிக்க மாருதி திட்டம்





மின் வாகன சந்தையை வலுப்படுத்தும் வகையில், அவற்றுக்கான முக்கிய உதிரிபாகங்கள், பேட்டரிகளை, அடுத்த சில ஆண்டுகளுக்குள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது.

இதன் வாயிலாக, இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்கவும், மின் வாகன துறையில் உலகளவில் இந்தியாவை வலுவான இடத்தில் நிலைநிறுத்தவும் இயலும் என அந்நிறுவனம் நம்புகிறது.

நாட்டின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, தனது முதல் மின்சார காரான இ - -விதாராவின் விற்பனையை, உள்நாட்டு சந்தையில் வரும் ஜனவரியில் துவங்க உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் ஆதரவுக்கு பின், மின் வாகன உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க உள்ளதாக மாருதி சுசூகி அதிகாரிகள் தெரிவித்தனர்.


அலுமினிய அலாய் வீல் தயாரிப்புவீல்ஸ் இந்தியா ஒப்பந்தம்




அலுமினியம் அலாய் வீல் தயாரிப்புக்கான வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப உதவியை பெறுவதற்கு, ஜப்பானின் டாபி இண்டஸ்ட்ரீஸுடன் வீல்ஸ் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் உதவிகளை டோபி நிறுவனம் அளிக்கும். இது புதிய தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், உருக்கு அலுமினியம் பிரிவில் போட்டிகளை சமாளிக்க உதவும் என்று வீல்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறியுள்ளார்.



சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்கள் இந்திய பயணியர் அதிகம் செலவு





சிங்கப்பூரில், ஆடம்பர பொருட்கள் வாங்க அதிக செலவிடும் இந்திய சுற்றுலா பயணியரால், உலகளாவிய விலை உயர்ந்த பொருட்களின் விற்பனை சரிவை சிங்கப்பூர் சில்லரை வியாபாரிகள் சமாளிக்க முடிவதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில், இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் 5.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு, இந்திய சுற்றுலா பயணியர் செலவழித்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 4.40 சதவீதம் அதிகம். சிங்கப்பூரின் மிக முக்கியமான வணிக சந்தையாக இந்திய பயணியர் இருக்கின்றனர்.

Advertisement