விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு உபரி எத்தனால் பயன்படும்

புதுடில்லி: 'நம் நாட்டின் கூடுதலான எத்தனால் உற்பத்தி திறன் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வை சாதகமாகப் பயன்படுத்தி, நிலையான விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக உருவெடுக்க முடியும்' என தொழில்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் பயிர்க்கழிவுகள் உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட் களில் இருந்து தயாரிக்கப் படுவது நிலையான விமான எரிபொருள் எனப்படுகிறது. இது, குறைந்த கார்பன் உமிழ்வை கொண்டதாகும்.

இதுகுறித்து 'திரிவேணி இன்ஜினியரிங் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் சர்க்கரை வணிக பிரிவின் சி.இ.ஓ., சமீர் சின்ஹா தெரிவித்ததாவது:

நம் நாட்டில் எத்தனால் உற்பத்தி உபரியாக இருக்கிறது. அதே நேரத்தில் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கரும்புச்சாறு உள்ளிட்ட மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தானாலின் கார்பன் உமிழ்வு, மிகவும் குறைவு.

எனவே இதை பயன் படுத்தி சிங்கப்பூர் உள்ளிட்ட மிகப்பெரிய விமான போக்குவரத்து சந்தைகளுக்கு, இங்கிருந்து நிலையான விமான எரிபொருளை ஏற்றுமதி செய்யலாம். இதற்கான மையமாக உருவெடுக்க இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement