ஆங் சான் சூச்சி நலம்: மியான்மர் அரசு பதில்
நேப்பியாடோ: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி, 80, கொல்லப்பட்டிருக்கலாம் என, அவருடைய மகன் சந்தேகம் தெரிவித்த நிலையில், ராணுவ அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்து
உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இதனால் அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள அவரைப் பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், தன் தாய் சூச்சி இறந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என, அவருடைய மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து, மியான்மர் ராணுவம் நடத்தும் 'மியான்மர் டிஜிட்டல் நியூஸ்' என்ற இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'ஆங் சான் சூச்சி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் இறந்துவிட்டார் என்பது தேர்தலை சீர்குலைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பொய்' என, கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆங் சான் சூச்சி குறித்த புகைப்படமோ, மருத்துவ அறிக்கையோ இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அவரது உடல்நிலை குறித்து ஆதாரத்துடன் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
@block_B@ ஆங் சான் சூச்சி, 1989 - 2010 காலகட்டத்தில், 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலும், 2021 ஆட்சி கவிழ்ப்புக்கு பின், நான்கு ஆண்டுகள் என, 19 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்துள்ளார்.block_B