உலகிலேயே மிக உயரமான போர் நினைவுத் துாணில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை; தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பழனி

1

ராமநாதபுரம்: 2020-ல் சீனப் படைகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட 20 இந்திய வீரர்களை கவுரவிக்க உலகின் மிக உயரமான போர் நினைவுத் துாண் லடாக்கின் கல்வானில் அமைக்கப்பட்டுள்ளது.


மைனஸ் வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள ராணுவ மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இடத்தில் நினைவுத் துாண் கட்டப்பட்டுள்ளது. இதனை டிச.,7ல் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்.


சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தைச் சுற்றிலும் கல்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் ராணுவ வரலாறு ஆகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.


பழனிக்கு சிலை



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடுக்கலுார் கிராமத்தை சேர்ந்த பழனி இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றினார். பீரங்கி இயக்குவதில் வல்லவரான இவர் ஹவில்தார் பதவியில் இருந்தார். 2020 ஜூன் 16ல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார். பழனிக்கு மனைவி வானதி தேவி, மகன் பிரசன்னா, மகள் திவ்யா உள்ளனர்.


பழனிக்கு 2021ல் ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவு ஸ்துாபியிலும் பழனியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் பிப்.,8ல் அவர் பணிபுரிந்த அலகாபாத் ராணுவ மையத்தில் நினைவு கட்டடத்தில் நினைவு அரங்கம், பழனியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.


தற்போது உலகிலேயே மிகவும் உயரமான போர் நினைவுத் துாணில் பழனியின் பெயரும், அங்குள்ள வளாகத்தில் அவரது சிலையும் இடம்பெற்றுள்ளது. இதற்கு பழனியின் குடும்பத்தினர், அவரது கிராமத்தினர் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


இதே போன்று தமிழக அரசு சார்பில் ராமநாதபுரத்தில் பழனிக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாகவும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement