அறுசுவை: நமக்கான 'ஸ்பெஷல்'
வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், 'அறுசுவை உணவு, அறுசுவை விருந்து' என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை.
எந்த சுவைக்குஎன்னென்ன பலன்? புளிப்பு: உடலை துாய்மையாக்கும்; வளர்ச்சிக்கு உதவும். அதிக பசியோடு இருக்கும் போது, புளிப்பு குணமுடைய உணவுகள் சிறந்தது.
இனிப்பு: இது, உடலுக்கு சக்தியைத் தரும்; மூளைக்கு புத்துணர்ச்சியைத் தரும். குறிப்பிட்ட அளவுக்கு இனிப்புச் சுவை இருந்தால், உடல் வனப்பாய் இருக்கும். அதிகரித்தால், ஒருவித கிறுகிறுப்பைத் தரும்.
துவர்ப்பு: வயிறு சரியில்லை என்றால், வெந்தயக் கஞ்சி வைத்து சாப்பிடச் சொல்வர். மாதுளை, நெல்லிக்காய், வாழைப்பூ, தேங்காய்ப் பால், கறிவேப்பிலை, அத்திக்காய், கடுக்காய் இதெல்லாம் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை தான், புண்கள் ஆற காரணம். பால் வடியும் காய்களான பப்பாளி, அத்தி, மாங்காய், பலாக்காய் இவற்றில் கூட துவர்ப்புச் சுவை உண்டு.
கசப்பு: வெந்தயம், கடுகு, தனியா, பாகற்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய், மிதி பாகல் போன்றவை, கசப்புச் சுவை உடையவை. வாசனைத் தன்மை உடைய அஞ்சறைப் பெட்டியின் அத்தனை பொருட்களுமே கசப்புச் சுவை உடையவையே. நல்ல வாசனை தரும் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றில் கசப்பு சுவையும் கலந்திருக்கும்.
கசப்பு நம்முடைய ஜீரண நீர்களைத் துாண்டும். நரம்பை வலுவேற்றும். மூளைத் திறனை அதிகரிக்கும். நரம்பு வலி இருந்தால், கசப்புச் சுவை உணவை உட்கொண்டால், வலி போகும். உடலுக்கான நோய் எதிர்ப்புத்திறனை கசப்பு தரும்.
உவர்ப்பு: வெறும் உப்பு மட்டும் உவர்ப்புச் சுவைக்குள் வராது. தாது உப்புகள் எல்லாமே உவர்ப்புச் சுவைக்குள் தான் வரும். சுரைக்காய், புடலை, பீர்க்கன்காய், பூசணி மாதிரியான நீர்க்காய்களில் தாது உப்புகள் இருக்கின்றன. எதெல்லாம் சாறு தருகிறதோ அதெல்லாம் உவர்ப்புத்தன்மை உடையவை.
உவர்ப்பு, எலும்பை வளர்க்கும். ரத்த அணுக்கள் உருவாக, எலும்பு மஜ்ஜை தேவை. அந்த மஜ்ஜை சீராய் இயங்க உவர்ப்புச் சுவை முக்கியம்.
காரம்: மிளகு, மிளகாய், கீரை, வாழைத்தண்டு இவையெல்லாம் காரச்சுவை உடையவை. எதில் எல்லாம் நார்ச்சத்து உள்ளதோ, அதெல்லாம் காரச்சுவை உடையவை.
ஜீரண உறுப்புகளை சுத்தம் செய்ய இறைவன் படைத்த அற்புத சுவை, காரம். அது ஒரு, 'நேச்சுரல் கிளீனர்!' காரச் சுவையில் சத்து ஏதும் கிடையாது. ஆனால், அது, குடல் செரிமான நீர்களை நன்கு துாண்டி விடும். நார்ச்சத்து அல்லது காரச்சத்து பற்றாக்குறையால் பெரிய அளவில் ஜீரண உறுப்புகளில் கோளாறு வரும்.
சமையலை ருசிக்கத் தெரிந்தவர்கள், இங்கே சொன்ன அறுசுவைகளின் குணங்களை அறிந்து சாப்பிட்டால், நிச்சயம் ஆரோக்கியமான உடலை பெறலாம்.
மேலும்
-
பாஜவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது நானா, திருமாவளவனா: கேட்கிறார் சீமான்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
-
அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை; புடின் குற்றச்சாட்டு
-
மறக்க முடியாத சுவைக்கு அவிநாசி ஹரி பவனம் ஓட்டல்