மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க அலுவலகம் இயங்குகிறது. இதற்கு செல்லும் வழியில் உள்ள பாதையில், கடந்த இரு ஆண்டுக்கு முன், கழிவுநீர் சிரமைப்பு பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் விடப்பட்டுள்ளது.


அதனால் கழிவுநீர் தேங்கி, அவ்வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தும், கழிவுநீர் சீரமைப்பு பணிக்கு தோண்டப்பட்ட பாதையை சீரமைக்க முன்வரவில்லை.இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, மத்திகிரி பஸ் ஸ்டாண்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு மாநில தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் துரை, டைட்டன் டவுன் ஷிப் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோரிடம், மத்திகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கூடிய விரைவில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதனால், போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement