அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை

தடைகளை தகர்த்தெறிந்து, தைரியம், வேகத்தோடு முன்னேறி, மன உறுதியோடு பைக் ரேஸில் சாதனை புரிந்து வருகிறார் சென்னையை சேர்ந்த 27 வயதேயான நிவேதா ஜெசிகா. அவர் மனம் திறக்கிறார்...

அப்பா குமார் இறப்பிற்கு பின், அம்மா மலர்கொடியின் முழு ஆதரவில் வளர்ந்தேன். என் தங்கை ப்ரீலேன்ஸ் போட்டோகிராபர். பி.டெக்., படித்த பிறகு ஒலிம்பிக் கமிட்டியில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தேன். சிறுவயதிலேயே நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற உறுதி இருந்தது. 14 வயதில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து டூவீலர் ஓட்ட ஆசைப்பட்டேன். அவர்கள் பெண்கள் ஓட்டக்கூடாது என்றனர். விடாமல் முயற்சித்து அவர்களோடு நானும் பைக் ஓட்ட கற்றேன். எனது 18வது வயதில் லைசென்ஸ் பெற்று, பைக் ரேஸ் பயிற்சி பெற்றேன்.

கல்லுாரியில் படிக்கும் போது ரேஸ் கிளப்பிலும் சேர்ந்து பயிற்சி பெற்றதால் டூவீலர் தயாரிப்பு நிறுவனத்தில் பைக் ரைடர் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது. இந்த பணியின் போது இமாச்சல பிரதேச மலை மீது சென்று சாதனை படைத்தேன். இந்த பணியில் கிடைத்த வருமானம் என் கல்லுாரி படிப்பிற்கு உதவியது.

கடந்த 10 ஆண்டாக பைக் ரேஸிங் போட்டியில் ஈடுபட்டு வருகிறேன். ரேஸிங்கில் சர்க்யூட் ரேஸ் என்பது ரேஸ் ட்ராக்கில் மட்டுமே ஓட்டுவது, ட்ராக் ரேஸ் 500 மீட்டர் துாரத்தை சில செகண்டிற்குள் அடைவது. ஆப் ரோடு ரேஸ் என்பது பாதி ட்ராக், மீதி மணலில் பைக்கை ஓட்டி வெற்றி பெற வேண்டும். தேசிய போட்டிகள் மூலம் 50க்கும் மேற்பட்ட (டிராபி) கோப்பைகளை பெற்றுள்ளேன்.

சென்னை, கோயம்புத்துாரில் சிறப்பாக பைக் ரேஸ் நடத்துவதற்கான 'ட்ராக்' உள்ளது. இங்கு ஜூன் முதல் அக்., வரை தேசிய அளவிலான ரேஸ் நடைபெறும். சாம்பியன் ஷிப் பட்டத்திற்கான போட்டி நடைபெறும். இதில் அதிக புள்ளிகள் எடுப்போருக்கு சாம்பியன் ஷிப் பட்டம் கிடைக்கும். நான் அதிகளவில் சாம்பியன் ஷிப் பெற்றுள்ளேன்.

எனக்கு 2019ல் தான் சொந்தமாக பைக் கிடைத்தது. அப்போது நடந்த போட்டியில் சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றதன் மூலம் டி.வி.எஸ்., நிறுவனம் எனக்கு 200 சி.சி., ரேஸ் பைக்கை பரிசாக அளித்தது. இது தான் என் வாழ்விற்கு கிடைத்த முதல் பரிசு. ஆர்.,15 பைக்குகளை ரேஸ்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து, தேசிய அளவில் சாதித்து வருகிறேன்.

1000 பெண்களுக்கு 'பைக் ரேஸ்' பயிற்சி பைக் ரேஸில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு நான் உருவாக்கியது பைக் ரைடிங் பயிற்சி பள்ளி. இதில் பல மாநிலங்களை சேர்ந்த 1000 இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். சென்னை, கோயம்புத்துாரில் சிறப்பான பைக் ரேஸ் ட்ராக் இருப்பதால், பிற மாநில பெண்கள் பயிற்சிக்காக இங்கு வருகின்றனர்.

கார் ரேஸிலும் சாதிக்க ஆவல் தோன்றியது. சென்னையில் இண்டியன் நேஷனல் ஆட்டோ கேட்ஸ் சார்பில் நடந்த கார் ரேஸிங்கில் முதல் முறையாக பங்கேற்று, 2ம் இடத்திற்கான சாம்பியன் பட்டம் பெற்றேன். இந்த போட்டியில் ரோடு, மணல் இரு தளத்திலும் ஓட்டி சாதனை புரிய வேண்டும். பெங்களூரூ, கோவாவில் நடைபெற உள்ள அடுத்த சுற்றிலும் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறேன். 2024ல் சென்னையில் நடந்த எப்., 4 கார் ரேஸிங் துவக்க விழாவில் எங்களது கிளப் உறுப்பினர்களை கொண்டு 'சூப்பர் பைக்' மூலம், பைக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினோம்.

உடல் ரீதியாக தயாராக இருந்தால் மட்டுமே விளையாட்டில் சாதிக்க முடியும். தற்போது நான் மகளிர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர், புரோ ஸ்பீடு ரேஸிங் குழு முதல்வர், நிப்டி ஸ்போர்ட்ஸ் அமைப்பு நிறுவனராக இருக்கிறேன். எனது 'பைக் ரேஸ்' சாதனைக்கு தமிழக அரசு, 'ஆச்சரியதக்க பெண்' விருது வழங்கியதை பெருமையாக கருதுகிறேன். நடிகர் அஜித் குமாருடன் பைக் ரேஸில் பங்கேற்பது என் நீண்டநாள் ஆசை என்றார்.

Advertisement