என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன்; திருமாவுக்கு நடிகை கஸ்தூரி பதில்

8

திருப்பரங்குன்றம்: என் கணவர் பெயர் குமார், மகன் பெயர் கார்த்திகேயன் என்று விசி தலைவர் திருமாவளவனுக்கு பாஜ பிரமுகர் நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது பேசிய அவர், , தி.மு.க., ஆட்சியில் எதிர்த்து போராட பல விஷயங்கள் இருந்தாலும் பா.ஜ.,வினர், திருப்பரங்குன்ற விவகாரத்தை மட்டுமே கையில் எடுத்துள்ளனர். முருகன் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்றார்..

இந் நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

திருமாவளவன் மேல் நான் ரொம்ப மரியாதை வைத்திருந்தேன். அவர் சேராத இடம் சேர்ந்து, மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார்.முருகன் என்று பெயர் வைத்துள்ளனரா? கொண்டு வந்து காட்டுங்கள் என்று கேட்கிறாரே? என் மகனின் பெயர் கார்த்திகேயன் தான்.

கர்நாடகாவில் முருகன் இருக்கிறார். எத்தனை பேருக்கு அங்கு முருகன்னா என்று பெயர் இருக்கிறது தெரியுமா? முருகையா என்று பெயர் இருக்கும். எத்தனை பேரை நான் வந்து உங்களுக்கு காட்டணும். முருகன் என்று பெயர் இருக்கா? அடுத்தது குமரன் என்று பெயர் இருக்கா? என் கணவர் பெயர் குமார். அடுத்தது அலகு குத்துவீர்களா? மொட்டை அடிப்பீர்களா என இப்படி ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு நாம் பதிலே சொல்ல முடியாது சாமி. ஏன் என்றால் அவருக்கு (திருமாவளவன்) விஷயமும் தெரியவில்லை. நம்பிக்கையும் இல்லை.

அவருக்கு வெறும் வெறுப்பு மட்டுமே இருக்கிறது. ஆபாச சிற்பங்கள் இருக்கிற ஹிந்து கோயில்கள் என்று சொன்ன பெரிய மனிதர் தானே அவர்? அவரது கட்சியில் இருந்து எத்தனை பேருக்கு ஆபாச வீடியோ வெளியில் வருகிறது என்று அவர் கணக்கு சொல்வாரா?

வேங்கைவயல் இன்னமும் நாறிக்கொண்டு இருக்கிறது. அவர் இன்னும் அங்கே போகவில்லை. அய்யா... தூய்மை பணியாளர்கள் நேற்று வரைக்கும் போராடிக் கொண்டு இருக்கின்றனர். இவர் என்ன சொன்னாரு? அதைவிட ஆபாசம் இருக்கிறதா?

நீங்கள் யாரும் வேலை நிரந்தரம் கேட்காதீர்கள்... அப்படி கேட்டால் இதுதான் உங்களின் வாழ்க்கை என்று ஆகிவிடும். அதனால் அங்கே உள்ள ஒப்பந்ததாரரிடம் சென்று அதே வேலையை செய்யுங்கள் என்று பெரிய மனிதர் தானே இவர்.

அவரை விட ஒரு மனசாட்சி இல்லாத ஆபாச பேச்சாளர் யாராவது இருக்கிறார்களா இங்கே? கேட்டால் உடனே என் மீது வழக்கு போடுவார்கள். திருமாவளவனின் கொள்கைரீதியாக நாம் எதுவும் விமர்சிக்க முடியாது. நான் இதுமாதிரி ஒருதடவை கேட்டதற்கு கொடும்பாவியை எரித்து வழக்கு போட்டுள்ளனர்.

இவ்வாறு நடிகை கஸ்தூரி பேட்டியளித்தார்.

Advertisement