6 மாதத்தில் ரூ.660 கோடியை காப்பாற்றிய மத்திய அரசின் டிஜிட்டல் பாதுகாப்பு தளம்


புதுடில்லி: மத்திய அரசின் டிஜிட்டல் நுண்ணறிவு தளமான டி.ஐ.பி., வாயிலாக, கடந்த 6 மாதங்களில், 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி மோசடி முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.




இதுகுறித்து இத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டி.ஐ.பி., தளத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள், நிதி மோசடி அபாய குறியீடுகளை பயன்படுத்த துவங்கியுள்ளன. இது இவ்வாண்டு மே 22ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, வங்கித்துறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன.


ஆறே மாதங்களில் இவ்வளவு மோசடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுடன் சேர்ந்து இக்குறியீட்டு முறைகளைப் பயன்படுத்துவது குறித்து அறிவை பகிர்ந்துகொள்ளும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.



இதுவரை இதுபோன்ற 16 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் பெருமளவு மாற்றங்களை சந்தித்து வருகின்றன.

டிஜிட்டல் கைது நடவடிக்கை முதல் சட்டப்படியான தொலைத்தொடர்பு முறைக்கு போக்கு காட்டிவிட்டு இயங்கும் சிம் பாக்ஸ் நெட்வொர்க் வரை நன்கு திட்டமிடப்பட்ட இணைய குற்றங்கள் கூட்டாக அரங்கேற்றப்படுகின்றன.



தனிநபர்களை பொறுத்தவரை, இணைய குற்றங்களிலிருந்து அவர்களை காக்க சஞ்சார் சாத்தி செயலி, இணையதளம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement