பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

தங்களை நாத்திகர்களாக காட்டிக் கொள்ளும் மதவாத அரசியல்வாதிகள், மத ரீதியாக ஓட்டளிப்பவர்களின் ஓட்டுக்காக, அந்த ஓட்டுகள் தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் சுகத்திற்காக, பணத்திற்காக, ஹிந்து கடவுள்களை துாற்றுவதும், கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களை போற்றுவதும், அவர்களின் போலி மதச்சார்பின்மையை படம் பிடித்து காட்டுகிறது.

எந்த மத வழிபாட்டிலும் பங்கேற்காமல் இருப்பவர்கள் தான் நாத்திகர்களாக இருக்க முடியும்... ஓட்டு வங்கிக்காக வேஷம் கட்டுவோரை, வரும் தேர்தலில் ஓரங்கட்ட வேண்டும்!

சென்னை மயிலாப்பூர் மேற்கு பகுதி, அ.தி.மு.க., செயலர் ஜெ.விஜயபாஸ்கர் பேச்சு:

சென்னையில் மழை, வெள்ள துயரத்தில் மக்கள் கஷ்டப்பட்டபோது, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் ஆறுதல் கூற வரவில்லை; சாப்பாடு போடவில்லை. நடிகர் அஜித் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் வீட்டில் சாப்பாடு போட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, மக்களுக்கு விஜய் ஏன் உதவிக்கரம் நீட்டவில்லை? விஜய், அரசியல் கட்சி துவக்கிய பின், நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக நாடகமாடுகிறார்.

கடந்த, 35 ஆண்டுகளா தமிழக மக்களுக்கு உறவுக்காரனா இருக்கேன்'னு சொல்ற விஜய் தான் இதுக்கு பதில் தரணும்!


தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: அன்று கோடநாடு எஸ்டேட் வாசலில், கைகட்டி நின்று மன்னிப்பு கேட்பதற்கு, உன்னை (விஜய்) காத்து கிடக்க வைத்தது அ.தி.மு.க., தலைமை. நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்து, வருமான வரித்துறையை ஏவி, கழுத்தை பிடித்து சென்னைக்கு இழுத்து வந்தது பா.ஜ., தலைமை. ஆனால், 41 உயிர்கள் கரூரில் பறிபோன போதும், 'எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், தன் கூட்டத்துக்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என நினைக்க மாட்டார்' என்று பெருந்தன்மை பேசிய தி.மு.க., தான் உனக்கு தீய சக்தி என்றால், பேசுவது நீ அல்ல; பிணை கைதியாக வைத்து, உன்னை பேச வைப்பது, அந்த பின்னணி பா.ஜ., சக்தி தான் என்பதை, ஊர், உலகம் அறியாதா என்ன?

விஜயை பின்னாடி இருந்து பா.ஜ., தான் இயக்குது என்றால், அவர் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்திருப்பாரே!


அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

அ.தி.மு.க., ஏன் தி.மு.க.,வை தீய சக்தி என கூறியது என்பது, தற்போது தான் தனக்கு தெரிவதாக கூறிய நடிகர் விஜய், இன்னும் அரசியல் களத்தை முழுமையாக தெரிந்து கொள்ள, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, பாடம் கற்க வேண்டும்.

'அ.தி.மு.க.,வும் தீய சக்தி தான் என்பதை அங்க போய் பார்த்தால் தான் தெரியும்'னு சொல்லாம சொல்றாங்களோ?

Advertisement