பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கூடாது! கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கூடாது; போதுமான வசதிகள் இல்லாத நிலையில் சிரமம் ஏற்படும், என, கருத்து கேட்பு கூட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், ஏழு கோடி ரூபாயில், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகின்றன.இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் இயக்கம் குறித்துகருத்து கேட்பு கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
துணை தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் குமரன், வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன் முன்னிலை வகித்தார். தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சக்திவேல், நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் பேசுகையில், ''பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு - 507, திருப்பூர் - 171, பழநி - 382, தாராபுரம் - 40, பாலக்காடு - 87, வால்பாறை - 45, திருச்சூர் - 46 என மொத்தம், 1,278 முறை (டிரிப்) பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், கிழக்கு, வடக்கு பகுதியில் நகர பஸ்கள் - 491, தெற்கு, மேற்கு பகுதியில் நகர பஸ்கள் - 679 என மொத்தம், 1,170 'டிரிப்' பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் நெருக்கடி ஏற்படும். பஸ்கள் நிறுத்தி எடுத்துச் செல்ல போதிய இடவசதி இல்லை. அதற்குரிய வசதிகளை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் பேசுகையில், ''பழைய பஸ் ஸ்டாண்டை, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இடமாற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் இடம் மாறுவதற்கு முன், அங்கு ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் அருகே, ரவுண்டானா அமைக்காமல், சி.டி.சி. மேடு அருகே ரவுண்டானா அமைத்து திரும்பி வர வழிவகை செய்ய வேண்டும். ரோட்டை அகலப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்,'' என்றார்.
பஸ் உரிமையாளர்கள், நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது:
புது பஸ்ஸ்டாண்டில், அனைத்து பஸ்களும் நிறுத்தம் செய்வதற்கான இடவசதி வேண்டும்.ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைத்து அனைத்து பஸ்களும் அங்கு கொண்டு சென்றால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு வழியாக மட்டும் பஸ்கள் வெளியேறும் போது, இடையூறு ஏற்படும். அங்கு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு முன்பே கருத்து கேட்டு இருந்தால், எங்களது கருத்துக்களை தெரிவித்து இருப்போம். தற்போது கட்டி முடித்த பின் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது கண்துடைப்பாக இருக்கும். மக்களுக்காக திட்டங்கள் இருக்க வேண்டும்; திட்டங்களுக்காக மக்களை மனமாற்றம் செய்யக்கூடாது.
கோர்ட் உத்தரவுப்படி, 55 கி.மீ., துாரத்துக்கு செல்லும் பஸ்களில், கல்லுாரி, பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர். எனவே, நகரத்துக்குள் வந்துசெல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பஸ்களில் இருந்து பயணியரை இறக்கி விட்டு, மற்றொரு பஸ்சை பிடிக்க ஓடும் போது, விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.பழைய பஸ் ஸ்டாண்டிலேயே வசதிகளை மேம்படுத்தி தொடர்ந்து இங்கேயே செயல்படுத்த வேண்டும்.
புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இடமாற்றம் செய்வதற்கு எங்களது ஆட்சேபனையை தெரிவிக்கிறோம். தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்டில், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பகுதியாக மாற்றலாம்.
இவ்வாறு, கூறினர்.
@block_B@
கமிஷனர் பேசுகையில், ''புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. தொடர்ந்து, கள ஆய்வு செய்வோம். அதன்பின், இறுதியாக ஒரு கூட்டம் நடத்தி, அந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்த பஸ்களை கொண்டு செல்லலாம்; மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கலாம்,'' என்றார். தொடர்ந்து, புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தம் செய்து ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ரேக்குகளில் பஸ் நிறுத்தம் செய்து, பஸ்களுக்கு இடையே உள்ள இடைவெளி, பஸ் அகலத்துக்கு ஏற்றபடி உள்ளதா; மற்றொரு பஸ் செல்வதற்கு இடையூறுகள் உள்ளதா என்பது குறித்து நேரடி ஆய்வு செய்தனர்.block_B
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு