அத்திக்கடவு திட்டம்-2ல் தனிக்குழு ஆய்வு; உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அறிக்கை

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறண்ட பகுதி குளம், குட்டை, ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, பாசன வசதி, நிலத்தடி நீராதார உயர்வுக்காக அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 2023 மார்ச் 25ல் பயன்பாட்டுக்கு வந்தது.


இதில், 24,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் வழங்கினர். பவானி, காளிங்கராயன்பாளையம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர், 1.5 டி.எம்.சி., 70 நாட்களுக்கு மட்டும் பம்பிங் செய்து, 1,045 குளம், குட்டை, ஏரிகளில் கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. குழாய் சிறியது, மண் அடைப்பு, குழாய் உடைப்பு என்ற காரணத்தால், 100க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை தொடர்ந்தது.


இதற்கிடையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 ஏற்படுத்தி, விடுபட்ட குளங்கள், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பாசன பகுதியை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஒரு பகுதி விவசாயிகள் எதிர்க்கின்றனர்.


இதுபற்றி, அத்திக்கடவு - அவிநாசி திட்ட அலுவலர்கள் கூறியதாவது: திட்டம்-2க்கான கோரிக்கை வலுப்பதால், ஈரோட்டில் தனி பொறியாளர் குழு அமைத்து, நீரேற்றத்தில் சாத்தியம், எந்தெந்த பகுதி குளங்களை இணைக்கலாம், எங்கு நீரேற்றம் நடக்கும்
என்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களது ஆலோசனைக்கு பின், உயரதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில், அரசு பரிசீலித்து அறிவிப்பு செய்யும். இவ்வாறு கூறினர்.

Advertisement